தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தனது வாக்கை குந்தவை நாச்சியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் பதிவு செய்ய சென்றார். ஆனால் அங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்தார்.

Continues below advertisement

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதுபோல, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் அமைக்கப்பட்ட 2 ஆயிரத்து 501 வாக்குச் சாவடிகளிலும் தொடங்கியது. இதேபோல, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் வாக்களிக்கக்கூடிய குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி, வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வந்தனர்.

இதனிடையே, மினணு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், வாக்குப் பதிவு நின்றுபோனது. இந்நிலையில் இந்த வாக்குச் சாவடிக்கு தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் 7.30 மணியளவில் சென்றார். இயந்திரத்தில் பழுது காரணமாக வாக்குப் பதிவு நின்று போன விவரம் அறிந்து பரபரப்பான அவர், தஞ்சாவூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் ப. நித்யாவுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார்.

Continues below advertisement

ஆனால், அவர் செல்போனை எடுக்காததால், வாக்குப் பதிவு இயந்திர தொழில்நுட்பநர்களுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது, ஏற்கெனவே அலுவலர்கள் கொடுத்த தகவலின்படி, தொழில்நுட்பநர்கள் நிகழ்விடத்துக்கு வந்தனர். இயந்திரப் பழுது நீக்கப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால், மாவட்ட கலெக்டர் சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்துச் சென்றார்.

இதேபோல, தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிகாடு கிராமத்திலுள்ள வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தொடங்கி செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை சரி செய்து வாக்குப் பதிவு தொடங்குவதற்கு அரை மணிநேரம் தாமதமானது. இதேபோன்று மாவட்டத்தில் சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால், வாக்குப் பதிவு ஏறத்தாழ அரை மணிநேரம் தாமதமாக தொடங்கியது.