தஞ்சாவூர்: எவ்வளவு பணம் செலவு செய்து கட்டப்பட்ட இந்த கட்டிடம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுடன் இருப்போர் தங்கும் அறை திறக்கப்படாமல் இருப்பதுதான் இப்போது மக்கள் மத்தியில் கோரிக்கையாக எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மிக பழமையான மருத்துவமனை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் 1,100க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


ரூ.150 கோடியில் பன்நோக்கு உயர் மருத்துவ சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், மூளை நரம்பியல், சிறு நீரகத்துறை, இதய அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத்துறை, முடநீக்கியல்துறை, மனநல மருத்துவம், மயக்கவியல் துறை என்று பல்வேறு துறைகள் உள்ளன. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர் பகுதியை மக்களும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரிக்குதான் வருகின்றனர்.


இங்கு சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து உள்நோயாளியாகவும், புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களை கவனித்து கொள்வதற்காக அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது.


ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை அறிக்கையை பெற்று வருவதற்கும், டாக்டர்கள் வார்டுக்கு வரும்போது நோயாளிகளுக்கு என்னென்ன தொந்தரவு இருக்கிறது என தெளிவாக கூறுவதற்கும் உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்தினர் அவசியம் தேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.


இப்படி உள்நோயாளிகளுடன் வார்டில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். மற்றவர்கள் வார்டுக்கு வெளியேதான் இருக்க வேண்டும். உள்நோயாளிகளுடன் இருப்பவர்கள் குளிப்பதற்கும், அவர்கள்  தங்குவதற்கும் போதுமான இடவசதி இல்லை. இந்நிலையில் நோயாளிகளுடன் உள்ளவர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.


இவர்களது கோரிக்கையை ஏற்று மாநகராட்சி அலுவலகத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நோயாளிகளுடன் இருப்போர் தங்கும் அறை புதிதாக கட்டமுடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீப்புண் சிகிச்சை பிரிவுக்கு பின்புறம் அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இது வரை திறக்கப்படாமல் உள்ளது.


தற்போது மழை மற்றும் பனிக்காலம் என்பதால் நோயாளிகளுடன் இருப்போர் தங்குவதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் குளிக்க வேண்டும் என்றால் கூட மிகவும் அவதிப்படும் நிலை உள்ளது. மழை பெய்தால் ஒதுங்க இடமின்றி அவதியடைந்து வருகின்றனர்.


எனவே புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.


இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறோம். நோயாளிகளுடன் தங்குபவர்களுக்காக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை திறந்து விட்டால் மிகுந்த உதவியாக இருக்கும். மழை பெய்தால் பஸ்ஸ்டாப் உட்பட கிடைக்கும் இடங்களில் நிற்கும் நிலை உள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றனர்.