தஞ்சாவூர்: கோடை விடுமுறை மற்றும் சீசன் காலத்தை முன்னிட்டு, கும்பகோணம் வழியாக தென் மாவட்டங்களுக்கும் சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கும் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என டெல்டா மாவட்டப் பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Continues below advertisement

மிகவும் பழமையான ரெயில்பாதை

தஞ்சை - கும்பகோணம் - விழுப்புரம் ரெயில் பாதை சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. இந்த பாதை வழியாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட தென் பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டதால் மெயின் லைன் பாதை என அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தை சுற்றிலும் கிராமங்கள் அதிகம். ரெயில் பயணம் நேரம் மற்றும் விலை குறைவு ஆகிய காரணங்களால் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். முக்கியமாக பெண்களுக்கு மிகவும் சௌகரியமான பயணம் என்றால் அது ரயில் பயணம் என்றால் மிகையில்லை.

Continues below advertisement

கும்பகோணம் ரெயில் நிலையத்தின் வழியாக திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு பாசஞ்சர் ரெயில் சேவையும், புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை வழியாக நாகர்கோவிலுக்கும், மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு பகல் நேர ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் பெங்களூரு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், கோடை விடுமுறை மற்றும் சீசன் காலத்தை முன்னிட்டு, கும்பகோணம் வழியாக தென்மாவட்டங்களுக்கும், ஆன்மிக தலங்களுக்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என டெல்டா மாவட்ட பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதிய இருக்கைகள் கிடைப்பதில்லை

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், விழுப்புரம், திருச்சி, நெல்லை, தென்காசி வழியாக கேரளமாநிலத்திற்கு அனந்தபுரி விரைவு ரெயில், குருவாயூர் விரைவு ரெயில், கொல்லம் விரைவு ரெயில், உள்ளிட்ட விரைவு ரெயில்களும் மற்றும் மாநில எல்லைகளில் இருந்தும் இணைப்பு ரெயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறை மற்றும் சீசன் காலம் தொடங்கியுல்லதால் அனைத்து ரெயில்களும் கூட்டமாக செல்கின்றன. 

குறிப்பாக கும்பகோணம், தஞ்சை வழியாக இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் கூட்டமாக தான் செல்கின்றன. இதனால் முன்பதிவு மற்றும் சாதாரண பெட்டிகளில் இருக்கைகள் கிடைப்பதில்லை. இதனால் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறையை சுற்றியுள்ள பகுதி மக்கள் திருச்சி, விழுப்புரம் சென்று அங்கிருந்து பயணம் செய்யவேண்டிய நிலை உள்ளது.

இதனால் சில நேரங்களில் ரெயிலை தவற விடும் நிலை கூட ஏற்படுகிறது. இதனால் தஞ்சை, கும்பகோணம் வழியாக தென்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள், ஆன்மிக தலங்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். இந்தநிலையில் தேர்தலுக்காக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது. அந்த ரெயிலுக்கு டெல்டா மாவட்ட மக்களிடையே சிறப்பான வரவேற்பு ஏற்பட்டுள்ளது. எனவே ரெயில்வே துறை அதிகாாிகள் தேர்தலுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலை கோடைகால சிறப்பு ரெயிலாக இயக்க வேண்டும். அனைத்து ரயில்களிலும் பயணிகள் நெரிசல் அதிகம் உள்ளது. கோடைகாலம் என்பதால் வெயில் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ரயில்களில் நின்றுக் கொண்டே செல்லும் பயணிகள் வெகுவாக அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே சிறப்பு ரயில்கள் இயக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.