வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது. கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துச்செல்வன் வரவேற்றார். கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் ரூ.46 லட்சத்து 22 ஆயிரத்து 349 ரூபாய் மதிப்பிலான 11 வகையான அரசின் நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி பயனாளிகளுக்கு வழங்கி பேசுகையில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த 7 மாதங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. நாட்டிலேயே சிறந்த முதல்வர் என பெயர் எடுக்கும் வகையில் பல நல்ல திட்டங்களை மக்களிடையே கொண்டுசேர்க்கிறார் எனது தலைமையிலான அரசு என குறிப்பிடாமல் நமது அரசு  எனக் கூறி எதிர்க்கட்சியினரிடமும் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் அறிக்கை தெரிவிக்கிறது.




மு.க.ஸ்டாலின்  தலைமையிலான ஆட்சியில் பொது மக்களின் ஒத்துழைப்போடு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு  வரப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள பல நல்ல திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்துவதற்கு தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்து அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறேன். இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதே போல் இந்த பகுதி மக்களின் பிரச்சனைகளை எங்களது பிரச்சினையாக எண்ணி அதை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கும்பகோணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 11 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 575 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து தமிழக மக்கள் தமிழக அரசின் அனைத்து செயல்பாடுகளுக்கும் தங்களது ஆதரவை முழுமையாக தரவேண்டும் என்றார்.




நிகழ்ச்சிகள் தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், தமிழக பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சு.கல்யாணசுந்தரம், முன்னாள் நகர்மன்ற தலைவர்  சு.ப.தமிழழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதே போல் அம்மாப்பேட்டை, பாபநாசம், திருவிடைமருதுார் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, சலவை பெட்டி வாங்க வந்த பெண் ஒருவர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடன் செல்பி எடுத்து கொள்ள ஆசைப்பட்டார். இதனை அறிந்த அமைச்சர், அப்பெண்ணிடம் செல்பி எடுத்து கொள்ளலாம் என்று கூறவே, ஆர்வமுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறாடா கோவிசெழியன், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனுடன், ஆர்வமுடன் செல்பி எடுத்து கொண்டார்.