தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இதயவலி மற்றும் நெஞ்செரிச்சல் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 46 வயது நபரை பரிசோதித்த மருத்துவர்கள் இருதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதை ஆஞ்சியோகிராம் சிகிச்சை ரிப்போர்ட் மூலம் கண்டறிந்தனர்.
"இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் மூன்று முக்கிய கரோனரி இரத்தக்குழாய்களில் (Coronary Arteries) ஒரு முக்கிய இரத்தக்குழாயில் மிகவும் கடுமையான அடைப்பு ஏற்பட்டிருந்தது. பொதுவாக கொழுப்புப் படிவங்களால் மட்டுமே ஏற்படும் அடைப்பைப் போல இல்லாமல், இந்த நோயாளிக்கு அதிகளவு சுண்ணாம்புச் சத்து (Severe Calcium Deposition) படிந்து, அதன் மேல் இரத்தக் கட்டிகளும் உருவாகியிருந்தன. இதன் காரணமாக அந்த இரத்தக்குழாயில் இரத்த ஓட்டம் முற்றிலும் தடைபட்டிருந்தது.
இந்தச் சுண்ணாம்புப் படிவங்கள் எலும்பைப் போன்ற கடினத்தன்மை (Calcified Lesion) கொண்டிருந்ததால், வழக்கமான பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் அவற்றை விரிவுபடுத்துவது சாத்தியமில்லாத சூழல் நிலவியது. மிகவும் சவாலான மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நபருக்கு ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் இளங்குமரன் திறமைவாய்ந்த மருத்துவ குழுவை கொண்டு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேத் லேப் அரங்கில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரத்தக்குழாயின் உள்ளே சிறப்பு மருத்துவக் கருவிகள் செலுத்தப்பட்டு, சுண்ணாம்புப் பாளங்கள் மற்றும் இரத்தக் கட்டிகள் மிகத் துல்லியமாக உடைக்கப்பட்டு, சிறிய துகள்களாக மாற்றி பாதுகாப்பாக அகற்றப்பட்டு சிக்கலான ஆஞ்சியோபிளாஸ்டி வெற்றிகரமாக மேற்கொண்டு சரிசெய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இரத்தக்குழாய் மீண்டும் சுருங்காமல் இருப்பதற்காக, நவீன ஸ்டென்ட் (Stent) வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டிருந்த இரத்தக்குழாயில் 100% இரத்த ஓட்டம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் உடல்நிலை முழுமையாக மிகவும் திருப்திகரமாக உள்ளது. அவர் தற்போது குணமடைந்து,இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இந்த சிகிச்சையை பற்றி இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் இளங்குமரன் விளக்கமளித்த போது முன்னதாக இதுபோன்ற கடுமையான சுண்ணாம்புப் படிவங்கள் கொண்ட இதய அடைப்புகளுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை (Bypass Surgery) மட்டுமே முக்கிய தீர்வாகக் கருதப்பட்ட நிலையில், நமது மருத்துவமையின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள், அனுபவமிக்க இதயநோய் நிபுணர்கள் குழுவின் திறமையால், மிகக் குறுகிய நேரத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி முறையிலேயே இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்துள்ளது எனவும் இத்தகைய நவீன சிகிச்சை முறைகள், சிக்கலான இதய நோய்களுக்கு பாதுகாப்பான, துல்லியமான மற்றும் விரைவான தீர்வுகளை வழங்குவதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன எனவும் கூறினார்.
