தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட இடையூறு போலவே கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டத்திலும் பிரச்னை ஏற்பட்டது. தஞ்சையை போலவே இங்கும் 2 பேர் காயமடைந்தனர். இது ஆன்மீக பெரியவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் தேர்


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் தேர் பள்ளத்தில் சிக்கியதால் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் தேர் செல்லும் வழியில் ஒரு கடை பக்கவாட்டு சுவர் மீது மோதியதில் இடிந்து விழுந்து 2 பேர் காயமடைந்தனர். 


சித்திரை பவுர்ணமி பெரிய தேரோட்டம்


கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் திவ்ய தேசங்களில் மூன்றாவது தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் போற்றப்படுகிறது. இக்கோயிலில் சித்திரை பவுர்ணமியில் பெரியத் தேரோட்டமும் நடத்தப்படும். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய தேராக சாரங்கபாணி கோயில் சித்திரைத் தேர் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


அலங்காரத்துடன் 450 டன் எடை


இங்கு சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இன்று சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. சாதாரண நிலையில் 350 டன் எடையுடைய இத்தேர் அலங்கார கட்டுமானத்துக்கு பின்னர் 450 டன்னை எட்டியது. தேர் அடிமட்டத்திலிருந்து சுவாமி ஆசன பீடம் வரை 28 அடி உயரமும், தேரின் சுற்று விட்டம் 28 அடியும் உடையது. தேர் அலங்காரத்துக்கு பின்னர் ஒட்டுமொத்த 110 அடி உயரத்தை அடைந்தது.


முதல்முறையாக சிக்கியது


இத்தேரில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளியதைத் தொடர்ந்து, இரு பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் இத்தேர் உச்சிபிள்ளையார் கோயில் அருகே சென்றபோது, சாலையில் உள்வாங்கியதால் சிறிது நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மேலும் ஒரு பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, தேர் நகர்த்தப்பட்டது.




பள்ளத்தில் சிக்கிக் கொண்ட தேர்


பின்னர் சாரங்கபாணி தெற்கு வீதியில் ராமசாமி கோயில் அருகே சென்ற திடீரென இடது புற சக்கரம் ஏறக்குறைய 5 அடி ஆழத்துக்கு உள்வாங்கியது. தொடர்ந்து அந்த பள்ளத்தில் மணல், ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு, கிரேன் உதவியுடன் தேர் சக்கரத்தை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட,னர். கடுமையான இந்த போராட்டம் 3 மணிநேரம் தொடர்ந்தது. பின்னர் பள்ளத்தில் சிக்கிய சக்கரம் மீட்கப்பட்டது.


குடிநீர் உந்து சக்தி நிலையத்துக்கான குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் சமீபத்தில்தான் இந்த பள்ளம் தோண்டப்பட்டு மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பள்ளம் சரியாக மூடப்படாமல், தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் மீது வந்த தேர் அதிக எடைகாரணமாக சாலை உள்வாங்கி உள்ளது என்று காரணம் தெரிவிக்கின்றனர். இதனால் தேர் தாமதமாக நிலையைச் சென்றடைந்தது.


சுவர் மீது மோதியதில் 2 பேர் படுகாயம்


இந்த காலதாமதம் ஒருபுறம் என்றால் மேல வீதியில் தேர் சென்றபோது போதிய இட வசதி இல்லாதததால், வணிக நிறுவனத்தின் பக்கவாட்டுச் சுவர் மீது மோதியது. இதையடுத்து தேரை வேகமாக நகர்த்தும்போது சுவரின் ஒரு பகுதி இடிந்தது. இந்த சுவரின் கீழே நின்று கொண்டு இருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த நாராயணன் (23), பிரபாகரன் (20) ஆகியோர் இடிபாடுகள் விழுந்து படுகாயமடைந்தனர். உடன் அவர்கள் இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


தஞ்சை தேர் போலவே கும்பகோணத்திலும் சிக்கல்


கடந்த 20ம் தேதி தஞ்சை பெரியகோயில் தேரோட்டத்தின் போதும் தேர் அலங்காரம் 3 முறை மின்கம்பத்தில் சிக்கியது. இதை சரி செய்தபோது 2 மின்வாரிய ஊழியர்கள் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 2 கோயில் தேரோட்டத்திலும் ஏற்பட்ட பிரச்சினை ஆன்மீக பெரியவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது.