தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, தனக்கு 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி மாணவி கூறிய புகாரின் பேரில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 3 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்த இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
தஞ்சாவூர் அருகே பொன்னாப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உதவி ஆய்வாளர் அபிராமி மற்றும் போலீஸார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினர். அப்போது அப்பள்ளியை சேர்ந்த ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயதுடைய 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தன்னிடம் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் 3 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி மாணவியிடம் வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியின் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் பல்வேறு சந்தர்ப்பங்களில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
பின்னர் சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களை அழைத்து வந்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரும் சிறுவர்கள் என்பதால் அவர்களை நேற்று கைது செய்து தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த இல்லத்தில் சேர்த்தனர்.
மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு
தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் மின்வாரிய பிரிவு அலுவலத்தில் இருந்து 1750 மீட்டர் அலுமினிய கேபிளை திருடிச் சென்ற மர்மநபர்களை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் மின்வாரிய பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மின் பணிகளுக்காக ஏராளமான அலுமினிய மின் கேபிள்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அலுவலகத்தின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 1750 மீட்டர் நீளமுள்ள அலுமினிய கேபிளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மின் வாரிய அலுவலக ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தாலுகா போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து உதவிப் பொறியாளர் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலுமினிய கேபிளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
