தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் கோயிலில் சப்தஸ்தான திருவிழா நடந்தது. நாளை பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ளது ஐயாறப்பர் கோயில். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 51 வது தேவாரத்தலம் திருஐயாறு (திருவையாறு) ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால் இப்பெயர் பெற்றது. இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும்.
அம்பாள் அறம்வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளார். அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
சிவனின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பா என உரக்க குரல் கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டிடக்கலை அமைந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள இன்ஜினியர்கள் இந்த சப்தம் கேட்பது பற்றி ஆய்வு செய்தனர். ஆனால் இதற்கான காரணத்தை அறிய முடியவில்லை. இத்தலத்தில் முருகப்பெருமான் வில் வேல் அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக தனுசுசுப்ரமணியம் என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். இத்தகைய பெருமை வாய்ந்த ஐயாறப்பர் கோயிலில் இன்று சப்தஸ்தான திருவிழா நடைபெற்றது.
தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த ஏப். 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த ஏப். 25-ம் தேதி 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. கடந்த ஏப்.29-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, நேற்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமித்தது.
நாளை மே 3-ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோயிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
