தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவ க்கல்லூரி சாலையில் ஓரங்களில் கடைகள் போட்டு வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மேலும் வாகனப் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதால் ஆக்கிரமிப்பு கடைகளை உடன் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இஅந்த சாலையில் தினமும் சுமார் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. தொழிற் நிறுவனங்கள், ஸ்வீட்ஸ்டால், மருத்துவமனைகள், சர்ச், வங்கிகள் நிறைந்த பகுதி. இதனால் இங்கு வரும் மக்களின் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். மேலும் பாஸ்போர்ட் அலுவலகமும் இந்த பகுதியில்தான் அமைந்துள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் இப்பகுதியில் உள்ளது. இங்கு விபத்து உட்பட உடல்நல பாதிப்புகளுக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகம். தஞ்சை பகுதி மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் அடிக்கடி ஆம்புலன்ஸும் சென்று வருவதுவழக்கம். இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் வணிக வளாகங்கள், பாஸ்போர்ட் அலுவலகம், வங்கிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்களும் அதிகம் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்திலும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் மருத்துவக்கல்லூரி சாலையில் இரு ஓரங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
டிபன் கடை, பழக்கடைகள், ஜூஸ் கடைகள், பிரியாணி விற்பனை கடைகள், தள்ளுவண்டிகள், காய்கறி விற்பனை கடைகள் என அனைத்தும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் சிறிய இடத்தில் வைக்கப்பட்டு இருந்த இந்த கடைகள் நாளடைவில் சாலையின் பாதி தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையின் நடுவே வரை கடைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அந்த வழியாக செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் ஆம்புலன்ஸ்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகிய அனைத்திற்கும் இடையூறாக இருந்து வருகிறது.
கடைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் மாலை மற்றும் இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
