தஞ்சாவூர்: கோடை காலம்,தேர்தல் நேரத்தை முன்னிட்டு கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான பேருந்துகள் இயக்க வேண்டும் என்று தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியுசி நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

Continues below advertisement

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் ஏஐடியுசி  நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில் மாவட்ட அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது. ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. சந்திரகுமார் அகில இந்திய முடிவுகள் குறித்தும், மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம் மாநில முடிவுகள் பற்றியும் பேசினர். 

கூட்டத்தில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வந்த நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் வெகுவாக குறைக்கப்பட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்,    அரசு,தனியார் அலுவலர்கள் உள்ளிட்டு அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடுமையான கோடை காலம் மற்றும் தேர்தல் நேரத்தை முன்னிட்டு போக்குவரத்து கழக நிர்வாகம் ஏற்கனவே இயக்கப்பட்ட பேருந்துகளுடன் கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும்.

Continues below advertisement

தஞ்சை மாநகராட்சி சார்பில் கோடை காலத்தை சமாளிக்க மக்கள் கூடும் இடங்கள், முக்கிய நகர இடங்களில் சுகாதாரமான வெட்டிவேருடன் கூடிய குடிநீர், நீர் மோர் போன்றவற்றை பேருந்து நிலையம் பகுதிகளில் நிழல்கூரை அமைத்து தர மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும், வாக்காளர் பெயர் சேர்ப்பு வருகிற மார்ச் 26ம் தேதி வரை உள்ளதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அனைவரும் உடனடியாக பெயரை சேர்க்க வேண்டும்.

அத்துடன் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களித்து ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று ஏஐடியுசி வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறது. மேலும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு பணிக்கு வருகின்ற அரசு ஊழியர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நகர்புறங்களில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும், 

அவர்கள் பணிபுரிகின்ற இடங்களில் மின்சாரத்துடன் கூடிய தங்கும் இடம், குளியலறை, கழிவறை ,குடிநீர், உணவு உள்ளிட்ட தேவைகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்களுக்கு வேண்டிய பாதுகாப்பு வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்து தர ஏஐடியூசி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் துரை. மதிவாணன்,தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா. செந்தில்நாதன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் பி.சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.