தஞ்சாவூர்: தொழிலாளர்–விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆகஸ்ட் 10-ல் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

மத்திய அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆகஸ்ட் 10-ம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 4 மையங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள மின்வாரிய தொமுச அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கு.சேவியர், எஸ்.கே.எம். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

Continues below advertisement

கூட்டத்தில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தொழிலாளர்களுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டுள்ள 4 தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

என்எல்சி, எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். விவசாயிகள் போராட்டத்தின்போது அளித்த உறுதிமொழியின்படி, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்தும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆகஸ்ட் 10-ம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆகஸ்ட் 10-ம் தேதி மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.

கூட்டத்தில் தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், சந்தானம், ஏஐடியுசி நிர்வாகிகள் சி.சந்திரகுமார், ஆர்.தில்லைவனம், வெ.சேவையா, ஆர்.பி.முத்துக்குமார், சிஐடியு நிர்வாகிகள் சி.ஜெயபால், எம்.கண்ணன், கே.அன்பு, ஏஐசிசிடியூ நிர்வாகி கே.ராஜன், எச்.எம்.எஸ். சங்க நிர்வாகிகள் சின்னப்பன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.