தஞ்சாவூரில் நாளை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா தொடங்குகிறது. இதற்காக கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கோயில் முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு தகதகவென்று மின்னொளியில் ஜொலித்து வருகிறது.தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து ஏராளமான வெற்றிகளை குவித்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு கட்டிடக்கலையில் வானுயுர தமிழர்களின் பெருமைய உயர்த்தும் வகையில் பெரிய கோவிலை எழுப்பியவர் மாமன்னன் ராஜராஜ சோழன்.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறது. இந்த கோவிலின் கட்டுமானம் குறித்து உலக கட்டிக்கலை வல்லுநர்கள் இப்போதும் வியந்து பேசுகின்றனர். மாமன்னன் ராஜராஜ சோழன், கட்டடக்கலை, நீர் மேலாண்மை உள்ளிட்டைவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த ஆட்சியினை வெளிப்படுத்தியவர்.
அந்தக் காலத்திலேயே நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து மழை நீர் சேமிப்பு முறையைக் கையாண்டவர். தனித்திறனுடன் புரிந்த ஆட்சியின் மூலம் தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர். பொன்னியின் செல்வன் என்று போற்றக்கூடிய மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்திர தினம் சதய விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக விழா நடைபெறும். சதயவிழா தினத்தில் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை விடப்படும். பெரிய கோயில் முழுவதும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கும். அந்த வகையில் இந்தாண்டு வரும் 3ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பந்தல் அமைக்கும் பணிகள் வெகு மும்முரம் அடைந்துள்ளது.
கோயில் முழுவதும் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. நாளை 2ம்தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெறுகிறது. 3ம் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உள்ளூர் விடுமுறை குறித்து தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் 1037வது சதய விழா வரும் 3ம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12ம்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.