தஞ்சாவூர்: குடும்பத் தகராறு முற்றியதால் மனைவியை கொலை செய்துவிட்டு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார் கணவர். இதனால் தாயையும், தந்தையையும் இழந்து நிர்க்கதியான நிலையில் அந்த தம்பதியின் 3 குழந்தைகள் தவியாய் தவித்து வருகின்றனர். இந்த சோகம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் வட்டம், கீழக்காயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. பெயிண்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள் என்று மூன்று குழந்தைகளும் உள்ளனர். வீரமுத்துக்கும், ராஜேஸ்வரிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement


இதில் சில மாதங்களாகவே கணவன், மனைவி இருவருக்கும் குடும்பத்தில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால், கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு ராஜேஸ்வரி சென்றுவிட்டார். இப்படி பெற்றோர் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் இவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தன் மனைவி ராஜேஸ்வரியைக் கல்லுப்பள்ளத்திலிருந்து, கீழக்காயம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வீரமுத்து சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார்.


கடந்த ஏப்.26ம் தேதி இரவு அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் நாடகத்தைப் பார்க்கச் சென்றுவிட்டு மறுநாள் 27ம் தேதி அதிகாலை வீட்டுக்கு வந்துள்ளனர். மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக கணவன், மனைவிக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் வீரமுத்து, ராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தன் மனைவியை கொலை செய்த அச்சத்தில் வீரமுத்துவும் வீட்டுக்குள்ளே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் வெகுநேரமாக இந்த தம்பதிகள் வெளியில் வராத நிலையில் குழந்தைகள் அழுது கொண்டே இருந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சம்பட்டிவிடுதி போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீரமுத்து, ராஜேஸ்வரி இருவரும் இறந்து கிடந்தனர். தொடர்ந்து இருவரின் உடல்களைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். 


கருத்துவேறுபாடுகள், தொடர் தகராறு இவற்றால் தாய், தந்தை இருவரும் இறந்துவிட்ட நிலையில் தங்களின் எதிர்காலம் என்ன என்பது தெரியாமல் நிர்க்கதியாக அந்த மூன்று குழந்தைகளை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.