அதிகாரத்தை ஆணவத்துடன் காட்டிய காவல் ஆய்வாளர்... காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை
எளியோரை கண்டால் வலியோர் வாட்டுவார்கள் என்ற கூற்றை நிரூபித்தது காவல்துறை. தங்கள் வாகனத்தில இருந்து இறங்கிய காவல்துறையினர் டேபிளை தள்ளிவிட்டும் டேபிளில் இருந்த வாட்டர் பாட்டில்களை தள்ளி விட்டனர்.

தஞ்சாவூர்: அதிகாரத்தை ஆணவத்துடன் காட்டிய காவல் ஆய்வாளர் இப்போது காத்திருப்பு பட்டியலில் நிற்கிறார். உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்த திருச்சி மண்டல ஐ.ஜிக்கு மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நெய்வாசலில் போலீசாரின் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இதையடுத்து திருமயம் காவல்துறையினர் அங்கு சென்று அனுமதி இன்றி மஞ்சுவிரட்டில் காளைகளை அவிழ்த்து விட வந்திருந்தவர்களை அங்கிருந்து எச்சரித்து அப்புறப்படுத்தினர்.
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தக்கூடாது என்பது சரியான ஒன்றுதான். அப்படி திரண்டு இருந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பிய காவல்துறையை பாராட்டலாம். ஆனால் அதற்கு பின்னர் நடந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி பார்ப்பவர்களை கண்கலங்க செய்து விட்டது. அனைவரின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது காவல்துறை என்றால் மிகையில்லை. காவல்துறை உங்கள் நண்பன் என்று கெத்தாக கூறிக் கொண்டாலும் கொத்தாக அந்த வாசகம் மக்கள் மனதில் இருந்து அழிந்துள்ளது இந்த சம்பவத்தை பார்த்து.
மஞ்சுவிரட்டு போட்டியை கலைக்க வந்த காவல்துறை அங்கிருந்து நகர்ந்த போது போட்டி நடக்க இருந்த பகுதியில் முதியவர் ஒருவர் மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்காக தண்ணீர் பாட்டில், தர்பூசணி பழங்கள், கூல்டிரிங்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பதற்காக டேபிள் விரித்து கடை அமைத்து இருந்தார். எளியோரை கண்டால் வலியோர் வாட்டுவார்கள் என்ற கூற்றை நிரூபித்தது காவல்துறை. தங்கள் வாகனத்தில இருந்து இறங்கிய காவல்துறையினர் டேபிளை தள்ளிவிட்டும் டேபிளில் இருந்த வாட்டர் பாட்டில்களை தள்ளி விட்டனர். தடுக்க முடியாமல் சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் மண்ணாகிறதே என்ற வேதனையில் அந்த முதியவர் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சர்வமும் ஒடுங்கி நின்றிருந்தார். அதோடு விட்டார்களா காவல்துறையினர், தண்ணீர் குடங்களை காலால் எட்டி உதைந்து கடையை அப்புறப்படுத்திய காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதென்ன ஆக்கிரமிப்பு கடையா. ஒரு திருவிழா, கபாடி போட்டி, விளையாட்டு போட்டி போன்றவை நடக்கும் போது இதுபோன்று டேபிளை வைத்து அன்றைய வருமானத்திற்கு வழிதேடும் முதியவர்களை பார்க்கிறோம்.
அதுபோன்று அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெறும் பகுதியில் கடை அமைத்திருந்த முதியவரை அழைத்து செய்து கடையை வைக்கக்கூடாது என்று கூறியிருந்தால் அவர் உடன் அந்த கடையை அகற்றிக் கொண்டு இருப்பார். சிறிய அளவில் வைக்கப்பட்டு இருந்த அந்த கடையை ஆவணத்தோடு காலால் எட்டி உதைத்து பொருட்களை மண்ணில் தள்ளிவிட்டு சூறையாடிய காட்சி சினிமா படங்களில் வரும் வில்லன் என்ட்ரி காட்சி போல் பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பினர். தங்களின் கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். சிறிது நேரத்திலேயே அந்த வீடியோ பரவலாக பலருக்கும் பகிரப்பட்டது. கருத்து தெரிவித்தவர்கள் பொருட்களை எட்டி உதைத்து அந்த முதியவருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு உரிய தொகையை அந்த காவல்துறையினரே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட திருமயம் காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுமட்டும் போதாது காவல்ஆய்வாளர் உத்தரவை செயல்படுத்திய மற்றொரு போலீஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.























