நஞ்சில்லாத உணவு... இயற்கை விவசாயத்தில் வெற்றிக் கொடி நாட்டும் அருமலைக்கோட்டை விவசாயி
மாறிவரும் இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் இந்த நேரத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: இயற்கை விவசாயம் என்பது தொன்று தொட்ட காலம் முதலே நம்மிடையே இருந்து வந்த ஒன்றாகும். இடைப்பட்ட காலங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது என்பது நம்மால் மறக்கப்பட்ட நிலையில் இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையை நோக்கி திரும்பியுள்ளனர்.
மாறிவரும் இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் இந்த நேரத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து வருகின்றனர். பஞ்சபூதங்களையும் பாதிக்காமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் பொழுது நாம் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம் என்று கடந்த 20 ஆண்டுகளாக நம் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அதனை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து தரமான பொருட்களை மக்களுக்கு தருகிறேன் என்ற ஆத்மார்த்தமான திருப்தி உள்ளது என்று தெரிவிக்கிறார் தஞ்சை மாவட்டம்
அருமலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி தங்கராசு (59). தற்போது சம்பா பருவத்தில் கருப்பு கவுனி ரகத்தை பயிரிட்டு அறுவடை பணிகளை தொடக்கி வைத்து அவர் நம்மிடம் பேசியதில் இருந்து...
கடந்த 20 வருடமாக என்னோட இரண்டு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம்தான் செய்து வருகிறேன். குறுவை, சம்பா சாகுபடியின் போது ஒரே ரகங்களை பயன்படுத்தாமல் நம் பாரம்பரிய ரகங்களான கருப்புக்கவுனி, வெள்ளைக்கவுனி, சீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், ரத்தசாலி என்று மாற்றி மாற்றி சாகுபடி செய்யும் போது மண்ணின் வளம் மேலும் அதிகரிக்கும். ஒரே ரகத்தை பயன்படுத்தி சாகுபடி செய்தால் விளைச்சலும் குறையும். நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து இடுபொருட்களையும் நானே தயார் செய்து கொள்கிறேன். மீன் அமிலம், பஞ்சகவ்யா போன்றவற்றை பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்கிறேன்.

சம்பா பருவத்திற்கு கருப்பு கவுனி மற்றும் சீரக சம்பா சாகுபடி செய்தேன். இரண்டு முறைகளில் வயலை தயார் செய்யலாம். புழுதி ஓட்டி இரண்டு முறை வயலை உழுது வரிசையாக கையால் விதையை ஊன்றினால் கருப்பு கவுனி அழுத்தமாக வேர் பிடித்து அதிக தூர்கள் கட்டும். புழுதி ஓட்டுதல் முறையில் விதை ஊன்ற கட்டு கட்டுவோம். இதற்கு ஆட்கள் தேவை குறைவு. களைகள் மண்டாது. மற்றொரு முறையில் இரண்டு முறை உழுது கோனோவீடர் மூலம் விதைத்து சாகுபடி செய்யலாம். இரண்டு விதமும் நன்கு பயிர்கள் வளர்ச்சிக்கு உதவும். விதைத்த 10ம் நாளில் மீன் அமிலத்தை தண்ணீருடன் கலந்து பயிர்களின் வேரில் நன்கு படுமாறு அடிக்க வேண்டும். இது பயிர்களுக்கு நல்ல ஊக்கியாக இருக்கும்.
20 முதல் 22ம் நாளில் பஞ்சகவ்யா அடிப்போம். இது களைகள் மண்டாமல் இருக்க உதவும். களைகள் அதிகளவு இருக்காது, கோனோவீடர் அல்லது கயிறு கட்டி விதைக்கும் போது பயிர்கள் மத்தியில் நன்கு இடைவெளி இருக்கும். அதனால் களைகள் அதிகம் பரவாது. 4 நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 30ம் நாளில் களை இருந்தால் எடுப்போம். இயற்கை முறையில் விவசாயம் என்பதால் பூச்சி தாக்குதல் குறைவுதான். இருந்தாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டால் பூச்சி தாக்குதல் தென்படும்.
இதற்கு பூச்சி விரட்டி மருந்தை நாங்களே தயார் செய்து விடுவோம். இதற்கு யூகலிப்டஸ் இலை, வேப்பிலை, எருக்கம் இலை, வேலி பெருத்தி, வசம்பு பொடி ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து தயார் செய்து கொள்வோம். இந்த கலவையை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற கணக்கில் கலந்து பயிர்களில் தெளித்தால் போது பூச்சிகள் அண்டவே அண்டாது. இந்த பொருட்கள் அனைத்து நம்மை சுற்றியுள்ள இயற்கையே அள்ளித்தருகிறது. இதனால் உரம், பூச்சிக்கொல்லி ரசாயனம் போன்றவற்றை வாங்க தேவையில்லை. செலவும் குறைகிறது. இயற்கை பொருட்கள் என்பதால் மண்ணின் வளமும் பெருகிறது. பின்னர் கதிர் வரும் நிலையில் தேமூர் கரைசலை தெளிப்போம்.
தேமூர் கரைசல் என்பது தேங்காய், புளித்த தயிர் கலவைதான். இது அற்புதமான பயிர் ஊக்கி. தேங்காயை துருவி, புளித்த தயிரில் ஒருநாள் முழுவதும் ஊற வைத்து நன்கு வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் அளவில் கரைத்து தெளிப்போம். இதனால் பயிர் அதிக தூர் பிடித்து நன்கு வளரும். கருப்பு கவுனி நெல்லுக்கு ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன. கருப்பு கவுனி சாகுபடிக்கு பொதுவாக 150 முதல் 170 நாட்கள் வரை ஆகும், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது 140 நாட்களில் அறுவடை செய்து விடுவோம்.
நீர் மேலாண்மை மற்றும் சரியான இயற்கை உரமிடுதல் ஆகியவை முக்கியம். குறிப்பாக நாற்று நட்ட 45-50 நாட்கள் (கிளைத்தல்), 75-85 நாட்கள் (பூக்கும் பருவம்), 95-105 நாட்கள் (கதிர் உருவாதல்), மற்றும் 115-125 நாட்கள் (கதிர் வளர்ச்சி/பிரிதல்) ஆகிய நிலைகளில் கவனம் செலுத்த வேண்டும். 140-145ம் நாட்களில் காவிரித்தாய் சிலை வைத்து பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தி கை அறுவடைதான் செய்து வருகிறோம். பின்னர் கையால் அடித்து மூட்டைகளில் சேகரித்து வைத்து கொள்வேன்.
எந்த சாகுபடியிலும் நான் நெல்லாக விற்பனை செய்வதில்லை. அதை மதிப்புக்கூட்டி அவல், சத்து மாவு, அரிசியாகதான் விற்பனை செய்கிறேன். விளைபொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருவதால் நிறைவான வருமானம் கிடைக்கிறது. பாரம்பரிய நெல்லில் அவல் தயார் செய்து, கிலோவுக்கு ரூ. 130 வீதம் விற்பனை செய்கிறேன். வீரிய ரக நெல்லை விட பாரம்பரிய ரக நெல்லில் செய்யப்படும் அவலில் சத்து அதிகம் என்பதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரு ஏக்கரில் கிடைக்கும் அரிசியில் மதிப்பு கூட்டி அவலாக மாற்றி விற்பனை செய்யும்போது ரூ. 35 ஆயிரத்துக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது. செலவுகள் போக ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.
2 ஏக்கருக்கும் சேர்த்து உழுதல், விவசாய ஆட்கள் கூலி, களைப்பறித்தல் என 50 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.,60 ஆயிரம் வரை செலவு ஆகும். ஆனால் நெல்லாக விற்றால் லாபம் குறைவுதான். அதனால் கருப்பு கவுனி, சீரக சம்பா உள்ளிட்ட ரகங்களை அரிசியாக்கி பாக்கெட் போட்டு விற்பனை செய்வதால், அதன் மூலமும் தனியாக வருவாய் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்தில் எதுவும் வீண் போகாது. விளைச்சல் குறைவாக இருந்தாலும், கிடைப்பதை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் இரு மடங்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.























