தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த காசவளநாடு புத்தூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா வயல்களை மயில்கள் சேதப்படுத்தி வருகிறது. எனவே இதுகுறித்து வேளாண்மை துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தில் நெல் களஞ்சியமாக விளங்கி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா குருவை தாளடி என மூன்று போகும் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். தஞ்சை மாவட்டத்தில் நெல் மட்டுமின்றி வாழை, கரும்பு, எள், சோளம், தென்னை, காய்கறிகள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகிறது. இருப்பினும் நெல் சாகுபடி தான் அதிகளவில் நடைபெறும்.

Continues below advertisement

இந்நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி இருவருப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடிக்காக விவசாயிகள் தங்களது வயல்களில் உழவு செய்தும், நாற்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சம்பா சாகுபடியில் உரம் தெளிப்பது களை எடுப்பது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

தஞ்சை மாவட்டத்தில் தற்போது மயில்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எங்கு பார்த்தாலும் மயில்கள் கூட்டம் கூட்டமாக சென்று இறை தேடி வருகிறது. அவ்வாறு இடைத்தேட வரும் மயில்கள் சாகுபடி செய்துள்ள வயல்களில் இறங்கி அங்கு நடவு செய்யப்பட்டுள்ள நாற்றுகளை சேதப்படுத்துகிறது. ஒரு பக்கம் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகளவில் உள்ளது, மறுபக்கம் பகல் நேரங்களில் மயில்களின் தொல்லை அதிகளவில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

மேலும் மயில்களை விரட்ட வெடிகளை வைத்து வெடிக்க வைத்தாலும் எந்த பயனும் இல்லாமல் உள்ளது. மயில்களை விரட்டினால் அது எங்களை கொத்துவதற்காக பறந்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் உள்ளது. எனவே வேளாண்மை துறை சார்பில் இது குறித்து நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் மயில்களை கட்டுப்படுத்த வனத்துறை சார்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை மயில்களைக் காண்பது அறிதான ஒன்றாக இருந்து வந்தது. வனங்களில் காணப்படும் மயில்கள் சில கோவில்களில் வளர்ப்பு பிராணிகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றி வரும். ஆனால் அதற்கு பின்னர் கிராமப் புறங்களில் புதராக இருக்கும் இடங்களில் மயில்களைக் காண முடிந்தது. தொடர்ந்து மயில்களின் பெருக்கம் அதிகரித்து தற்போது காக்கை,குருவிகளுக்கு நிகராக கிராமங்கள் தோறும் பலநூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றித் திரிகின்றன.

பல்லி, ஓணான், தவளை, சிறுபாம்புகள் உள்ளிட்டவற்றை உணவாக உண்டு வாழும் மயில்கள் தானியங்களையும் கொத்தித் தின்று வருகின்றன. நெல், மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி உள்ளிட்டவற்றையும் உணவாக உட்கொள்ளும். மயில்கள் பரவத் தொடங்கிய காலத்தில் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றித் திரிந்ததால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் மயில் கூட்டம் அபரிமிதமாக பெருகிவிட்டது.

முன்பெல்லாம் மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் மயில்கள் தற்போது விரட்டினால் கூட ஓடுவதில்லை. பட்டாசுகளை வெடித்தாலும் சாதாரணமாக தலையை தூக்கி பார்த்துவிட்டு பயிர்களை கொத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. ஏற்கனவே பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு தற்போது இந்த மயில் கூட்டம் பயிர்களை சேதம் செய்வதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.