தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களுக்கு டிட்வா புயலால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்து தயார் நிலையில் உள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. தற்போது டித்வா புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை வடக்கு திசையில் இருந்து வடக்கு - வடமேற்கு திசை நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது இந்த புயல் ஜாஃப்னாவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும், வேதராண்யத்தில் இருந்து தென்கிழக்கு 140 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும், காரைக்காலில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு - தென்கிழக்கிலும், புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் தற்போது உள்ளது.
டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கனமழை முதல் மிக கனமழை வரை உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மாலை வரை தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதில் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தஞ்சை மாவட்டத்திற்கு சென்னை அரக்கோணம் 4-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 35 பேர் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளனர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் முகாமிட்டுள்ள இவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் படி மீட்பு பணிகளில் ஈடுபடுத்தவுள்ளனர்.
இதுகுறித்து மீட்புக்குழுவினர் கூறியதாவது: தற்போது டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளோம். மாவட்டத்தில் மழையின் போது மரங்கள் சாய்ந்து விழுந்தாலும், கட்டிடங்கள் இடிந்து விழுந்தாலும் அதில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றவும், புயல் வந்தால் அதில் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்களை காப்பாற்றவும் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்.
மேலும் ரப்பர் படகுகள், உயிர் காக்கும் லைப் ஷாக்கெட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து மீட்பு கருவிகளும் தயார் நிலையில் வைத்துள்ளோம். ஏதாவது உதவி என மாவட்ட நிர்வாகத்தின் பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தவுடன் எங்களுக்கு தகவல் வரும், வந்தவுடன் நாங்கள் அந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றனர்.
தமிழ்நாட்டில் டித்வா புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மற்றும் மழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழைநீர் அதிகம் தேங்கும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் அரசு சார்பில் மழைநீரை உடனே அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.