தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இன்று மொத்தம் 7 மையங்களில் நீட் தேர்வை 5 ஆயிரத்து 440 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை முதல் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதி வருகின்றனர்.


நீட் தேர்வு:


எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்காண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 7-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். சுமார் 20 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.


இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடப்பதை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3-ந்தேதி முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அந்த நுழைவு சீட்டில் மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுளள்து. நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான முன்னறிவிப்பு அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இணையதளம் மூலம் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.


தஞ்சையில் தேர்வு நிலவரம்:


தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்படும் மையங்கள் இன்று தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. அதிகாலை முதலே மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தொடர்ந்து இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று (மே.7) ஞாயிற்றுக்கிழமை நடந்து வருகிறது.  தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் தாமரை சர்வதேசப் பள்ளியில் 1,609, கும்பகோணம் தாமரை சர்வதேசப் பள்ளியில் 648, தஞ்சாவூர் ப்ளாசம் பப்ளிக் பள்ளியில் 495, கும்பகோணம் மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் 360 பேரும் எழுதுகின்றனர்.


3 மணி நேரம்:


மேலும் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் 648, தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 1,104, பட்டுக்கோட்டை பிரில்லியண்ட் பள்ளியில் 576 மாணவ, மாணவிகள் என மொத்தம் 5,440 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர்.


இதையொட்டி தேர்வு மையங்களில் குடிநீர், மின்சார வசதி, போக்குவரத்து வசதிகளும், தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி உள்ளது. இத்தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்கிறது.