மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் புதுச்சேரி மது வகைகளை வாகனங்கள் மூலம் கடத்தி வந்து தமிழக பகுதியில் விற்பனை செய்வது வாடிக்கையாகி வரும் நிலையில் காவல் துறையினரும் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மதுபானங்களை இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் என சாராய கடத்தல்காரர்கள் TR பட்டினம் மற்றும் வாஞ்சூர் பகுதியில் இருந்து கடத்தி வந்து நாகை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் வயல், கருவேலங்காடு, மயான பகுதிகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஒரு சில காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதால் தடை செய்யப்பட்ட மது வகைகள் கடத்தி வரப்படும் விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டும் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் கண்காணிப்பாளர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடர்பு கருத்து தெரிவித்துவரும் நிலையில் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

 


சாராய வியாபாரி ராஜ்குமார்



நாகை மாவட்டத்தில்  மது கடத்தல் குற்ற வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் குற்றவாளிகளை சிறையில் அடைத்தும் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நாகை காடம்பாடியில் உள்ள பழைய ஆயுதப்படை மைதானம் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுவதுடன் பின்னர் அந்த வாகனங்கள் ஏலம்  விடப்படும். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மது கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு பழைய ஆயுதப்படை மைதான வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஏலம் விட கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது இரண்டு இருசக்கர வாகனங்கள் காணாமல் போயிருப்பதை போலிசார் கண்டறிந்தனர்.

 


 

இது குறித்து நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் முருகன் இருசக்கர வாகனங்களை சாராய வியாபாரியான நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார்  என்பவரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து வாகனங்களை மீட்ட போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.

 



 

வேலியே பயிரை மேய்ந்த அதிர்ச்சி சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் முருகனை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் ஜவகர் தற்காலிக பணியிடம் நீக்கி உத்தரவிட்டார். மேலும்  தலைமறைவாக இருந்துவரும் காவலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  குற்ற சம்பவங்களை தடுக்கும் காவலரே குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது நாகை மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.