நாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற காயரோகண உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று சிவரத்திரி விழா நடைபெறவுள்ளதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இரவு, பகலாக வருகை தருவார்கள். மேலும் கடந்த 17ம் தேதி வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு மாணவிகள் கலந்து கொண்ட கட்டூரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதனால் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் திடீரென கோயில் வளாகத்திற்கு வந்தனர். அங்கு இருந்த பக்தர்களை உடனே வெளியேற உத்தரவிட்டனர். பின்னர் கோயில் வளாகத்தில் நிறுத்தி இருந்த அனைத்து வாகனங்களையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோயில் பணியாளர்கள் எல்லோரிடம் விசாரணை நடத்தியதுடன் கோயிலின் முக்கிய இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த பக்தர்கள் திடீரென எதற்காக இவ்வளவு போலீசார் வந்து சோதனை மேற்கொள்கின்றனர் என கேட்டனர். அப்போது உயர்நீதிமன்றத்தில் இருந்து நீதிபதிகள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரவுள்ளனர். எனவே பாதுகாப்பு பணியை அதிகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். 15 நிமிடம் நடத்திய சோதனைக்கு பின்னர் போலீசார் கோயில் அலுவலகத்திற்கு சென்று வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் யாராது போன் செய்தார்களா என கேட்டனர். அதற்கு அங்கு இருந்த பணியாளர்கள் அது போல் போன் அழைப்பு வரவில்லை என தெரிவித்தனர்.



 

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதில் நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது எப்பொழுது வேண்டும் என்றாலும் வெடிக்கும் என தகவல் வந்துள்ளது. அதன்அடிப்படையில் தான் போலீசார் சோதனை நடத்தினோம். சந்தேகத்தின் பேரில் யாராவது நடமாடினால் உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றனர். அப்பொழுது தான் அங்கு இருந்த பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரியவந்தது.