நாகை அடுத்த பனங்குடியில் கடந்த 1992 ஆம் ஆண்டு சி.பி.சி.எல்.,நிறுவனம் துவக்கப்பட்டது. இதற்காக கையகப்படுத்திய  விளைநிலங்களில் 400 ஏக்கர் நிலத்தை தரிசாக போட்டதால், கருவேல மரங்கள் காடாக மாறியுள்ளது. இதனால் நிலத்தடி நீ பாதிக்கப்பட்டு குடிநீருக்கே அல்லல்படும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆலை 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பனங்குடி, முட்டம், நரிமணம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம் ஆகிய 5 ஊராட்களில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



 

தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கடந்த 12ஆம் தேதி 5 ஊராட்சிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள அவர்களது கருப்பு கொடி ஏற்றியும்,தொடர்ந்து சி.பி.சி.எல்., ஆலையின் வாசலில் இருந்து  கருப்பு கொடியுடன் வாகனங்களில் பேரணியாக புறப்பட்டு விவசாய நிலத்தையும் விவசாயத்தையும் விவசாய தொழிலாளர்களின் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைக்கு சிபிசி எல் நிர்வாகம் பாக்காமல்  5 ஊராட்சிகளிலும் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 



 

இந்த நிலையில் ஆலை விரிவாக்க பணிகளை பார்வையிட சி.பி.சி.எல் நிறுவன சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா இன்று வருகை தந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனர் நுழைவுவாயில் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் விவசாயிகள் தங்களது நிலங்களையும் இருப்பிடத்தையும் விட்டு வேறு பகுதிகளுக்கு அகதிகளாக செல்ல இருப்பதாக கூறி  ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை விரிவாக்க பணிகளுக்காக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப் படுத்த முயலும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



 

விவசாயிகள் மீது அக்கறை உள்ள தமிழக முதல்வரால் மட்டுமே 40 கிராமத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களை காப்பாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கும் கிராம மக்கள் இவ்விவகாரத்தில்   தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.  உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து தங்களையும் விவசாய நிலத்தையும் காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.