தஞ்சாவூர்: டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு 14 கோட்டங்கள் இயங்கி வருகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை முல்லை தெரு,சுந்தரம் நகர், தைக்கால் தெரு, பர்மா காலனி, மேல் லைன் மற்றும் பூக்கார தெரு ஆகிய இடங்களில் மாநகர்நல அலுவலர் டாக்டர் வீ.சி. சுபாஷ் காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான நன்னீர் தேங்கக்கூடிய தேங்காய் சிரட்டை, டயர்கள், உடைந்த மட்பாண்டங்கள், அகல் விளக்குகள், பிளாஸ்டிக் கப்புகள், நீர் சேகரிப்புத் தொட்டிகள், பூந்தொட்டிகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று இம்மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகங்கள் ஆகியவற்றிருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநகராட்சிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்காக வருபவர்களின் விபரங்களை மாநகராட்சிக்கு மின் அஞ்சல் மூலமாக தினந்தோறும் தெரிவிக்கப்பட்டு அவ்வாறு பெறப்படும் அறிக்கைக்குகிணங்க மருத்துவ முகாம்கள் அமைத்தும், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
மேலும் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராமல் விடுப்பிலுள்ள மாணவர்களின் விசாலத்தினை சம்பந்தபட்ட துப்புரவு ஆய்வாளர்களுக்கு தெரிவித்திட கடிதம் அனுப்பட்டுள்ளது. இம்மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்களில் கொசுபுழு உற்பத்தியாகும் கலன்களை அப்புறப்படுத்திடவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பின்பற்றாவிடில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு என்பது ஒரு கடுமையான வைரஸ் தொற்று ஆகும், இது இந்தியா உட்பட உலகின் பல நாடுகளை தொடர்ந்து பாதிக்கிறது. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40% க்கும் அதிகமானோர் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இது இன்னும் பல நாடுகளில் நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
லேசான டெங்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் அதே வேளையில், கடுமையான டெங்கு அபாயகரமான சிக்கல்களுடன் இருக்கலாம். டெங்கு பெண் ஏடிஸ் ஏஜிப்டி கொசுவின் கடியால் ஏற்படுகிறது, ஜிகா, சிக்குன்குனியா போன்ற பிற வைரஸ்களை பரப்புவதற்கு காரணமான அதே இனம். இது டெங்கு வைரஸ் 1, 2 எனப்படும் நான்கு தொடர்புடைய வைரஸ்களால் (செரோடைப்ஸ் எனப்படும்) கொசுவால் பரவும் நோயாகும்.