தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் மழையால் பாதித்த பகுதிகளை எம்எல்ஏ நா.அசோக்குமாரில் பார்வையிட்டார்.


கனமழை: 


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ ஆகியோர் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி நடந்து சென்று குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். 


எம்.எல்.ஏ ஆய்வு:


பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதை பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அதே போல் கிழக்கு கடற்கரை சாலையில் செந்தலைப்பட்டினம் பகுதியில் விளங்குளம் ஏரி நிரம்பி, வெளியேறும் தண்ணீர் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 அடி உயரத்திற்கு செல்கிறது. 




இப்பகுதியில் இறால் பண்ணை ஆக்கிரமிப்பு காரணமாக, குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதேபோல், சம்பைபட்டினம்  பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் முழங்கால் அளவுக்கு சாலையில் தண்ணீர் செல்வதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.


சேதுபாவாசத்திரம் மற்றும் செந்தலைப்பட்டினம் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதை,, வெள்ள நீரில் இறங்கிச் சென்று எம்எல்ஏ,  வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் தெய்வானை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், திமுக சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன் மற்றும் பலர் பார்வையிட்டனர். மேலும் மோட்டார் இயந்திரம், பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


வயல்வெளிகளில் புகுந்த மழை நீர்:


தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக திருவையாறு அருகே கோணக்கடுங்கலாறில் கரை உடைப்பு ஏற்பட்டதால், வயல்களில் வெள்ளம் புகுந்தது.


தஞ்சை மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பலத்த மழை பெய்தது. இதில், பூதலூரில் 115 மி.மீ, திருக்காட்டுப்பள்ளியில் 85.2 மி.மீ., திருவையாறில் 78 மி.மீ. மழை பெய்தது. இதனால், கோணக்கடுங்கலாறில் வெள்ளப்பெருக்கு காரணமாக, வரகூர் பாலம் அருகே உடைப்பு ஏற்பட்டது.


இதன் காரணமாக செந்தலை, கோனேரிராஜபுரம், கருப்பூர், அந்திலி, குழிமாத்தூர், வெள்ளாம்பெரம்பூர், திருப்பூந்துருத்தி, வரகூர், அம்பதுமேல் நகரம் ஆகிய கிராமங்களிலுள்ள வயல்களில் வெள்ளம் புகுந்தது. இதனால், ஏறத்தாழ ஆயிரம் ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை ஆகிய பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்தது. அம்பதுமேல் நகரத்தில் சில குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.


மாவட்ட ஆட்சியர் ஆய்வு:


தகவலறிந்த மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், கோணக்கடுங்கலாறில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்தது. நேற்று சனிக்கிழமை மழை பெய்யவில்லை. இதனால், வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால் விரைவில் வடிந்துவிடும் என நீர் வளத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


இது குறித்து கோனேரிராஜபுரம் கே.எஸ். வீரராஜேந்திரன் கூறுகையில், பலத்த மழையால் கோணக்கடுங்கலாறில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை காரணமாக வந்த தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் கரை உடைந்து, வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், நெல், வாழை, வெற்றிலை ஆகிய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் பாசன விவசாயிகளை உள்ளடக்கிய குழு அமைத்து இந்த ஆற்றில் தூர் வார வேண்டும் என்றார்.


மூதாட்டி பலி: 


தஞ்சாவூரில் தொடர் மழை காரணமாக கூரை வீட்டில் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சாவூர் கீழவாசல் கவாடிகாரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயமணி (75). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவர் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.


இந்நிலையில் தஞ்சையில் பெய்த பலத்த மழை காரணமாக இவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஜெயமணி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கிழக்கு ோலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.