தஞ்சாவூர்: அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்று அடைய வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் 32 பல்வேறு துறை சார்ந்த அரங்கங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் 2025-ம் ஆண்டிற்கான அரசு பொருட்காட்சி தொடக்கவிழா நடந்தது. கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். முரசொலி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர்கள் கண்ணன், காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி வரவேற்றார்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்த அரசு பொருட்காட்சி 45 நாட்கள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்று அடைய வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் 32 பல்வேறு துறை சார்ந்த அரங்கங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்கு எந்தந்த துறையில் பெறப்படும் நலத்திட்ட உதவிகள், எவ்வாறு அணுக வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இந்த பொருட்காட்சி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள், பல்வேறு வகை சார்ந்த உணவு அரங்குகள் இடம் பெற்றுள்ளன. தனி மனித பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எந்த திட்டத்தை தொடங்கினாலும் செலவை பற்றி கவலைப்படாமல் திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்தி வருவபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் திராவிடமாடல் அரசு தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு தலா ரூ.6,400 மதிப்பிலான தையல் எந்திரங்களையும், 2 பேருக்கு தலா ரூ.15,750 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 5 சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.62 லட்சம் மதிப்பிலான கடன்தொகைகளும் வழங்கப்பட்டது.
மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் வெங்காய சேமிப்பு அமைப்பையும், கூட்டுறவுத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 400 மதிப்பில் பயிர்க்கடனும் என மொத்தம் 28 பேருக்கு ரூ.73 லட்சத்து 58 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, முதன்மைக்கல்வி அலுவலர் பேபி, மகளிர் திட்ட இயக்குனர் அருண்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக் நன்றி கூறினார்.
