தஞ்சாவூர்: நான்கே வயதான சிறுவன் அரியவகை எலும்பு குறைப்பாட்டால் அவதியடைந்து கை, கால்கள் இயக்க முடியாத நிலையில் அவதியடைந்து வந்தான். அவனுக்கு 8 மணிநேரம் சிக்கலாக கழுத்து, தண்டுவட அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றி நடமாட வைத்துள்ளனர் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவக்குழுவினர். 

Continues below advertisement

காவிரி டெல்டாவில் புகழ்பெற்ற தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நான்கு வயது சிறுவனுக்கு மிகவும் சிக்கலான அறுவை ஒரு அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். கழுத்து எலும்பு கடுமையாக விலகி தண்டுவடத்தை அழுத்தியதால், அச்சிறுவனின் இரு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்த நிலையில் இருந்தன. அதனை இந்த அறுவைசிகிச்சையின் மூலம் சரிசெய்து தண்டுவட அழுத்தத்தை நீக்கியுள்ளனர். பொதுவாக குழந்தைகளுக்கு செய்யப்படும் தண்டுவட அறுவை சிகிச்சையே அதிக சவாலானதாக இருக்கும் நிலையில், இந்தச் சிறுவனுக்கு இருந்த அரிய மரபணு எலும்பு குறைபாடு இந்தச் சிகிச்சையை மேலும் சிக்கலானதாக்கியது. 

தற்போது, அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், சிறுவனின் செயலிழந்திருந்திருந்த கை, கால்களில் அசைவு ஏற்பட்டு, உடல்நிலை படிப்படியாக சீராகி வருகிறது. அச்சிறுவன் தற்போது பிறரது உதவியுடன் நடக்கத் தொடங்கியிருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

இச்சிறுவன் ஒரு சிறிய விபத்தில் கீழே விழுந்ததைத் தொடர்ந்து, அவனது மேல் கழுத்து எலும்புகள் விலகின. இதனால் கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுவட நரம்புகள் பாதிக்கப்பட்டு, கை மற்றும் கால்களில் உணர்வும் இயக்கமும் அற்ற நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில், அந்தச் சிறுவனுக்கு எலும்புகளின் வளர்ச்சியையும், ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியையும், பாதிக்கும் 'ஸ்பான்டைலோபிபிசீல் டிஸ்ப்ளாசியா கன்ஜெனிட்டா' எனும் அரிய பிறவி குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டது.

கழுத்து-தண்டுவடத்தின் மேற்பகுதியில் ஸ்க்ரூ பொருத்துதல் (OCTSF) என அழைக்கப்படும்; இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் அருண்குமார், கவீஸ் ஆகியோர் மேற்கொண்டனர். மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் அரிமாணிக்கம் மற்றும் டாக்டர் வினோதா தேவி ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவைசிகிச்சைக்கு வெற்றியடைந்து மருத்துவக்குழுவினர் அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றினர். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பராமரிப்பை டாக்டர் ஷோபனா தேவி மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் கவனித்துக் கொண்டனர். குழந்தை நல மருத்துவர் டாக்டர் அப்துல் ரஹ்மான் இச்சிறுவனுக்கான சிகிச்சை செயல்பாட்டிலும், குணமடைந்து கைகால் இயக்கத்தை திரும்பப் பெறுவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

இதுகுறித்து நடந்த நிருபர்கள் சந்திப்பில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவைசிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் அருண்குமார் கூறுகையில் "இச்சிறுவன் மீண்டும் நடக்கத்தொடங்குவதற்கு உதவியிருப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். குழந்தைகளுக்கு தண்டுவட அறுவை சிகிச்சை செய்வது சவாலானது; அதிலும் இத்தகைய பிறவி மரபணு குறைபாடு உள்ள சிறார்களுக்கு அது இன்னும் கூடுதல் சிக்கலானது. நவீன நரம்பியல் இமேஜிங் மற்றும் நரம்பு மண்டல கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்த அறுவை சிகிச்சையை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் எங்களால் செய்ய முடிந்தது. சிறுவனின் எலும்பு வளர்ச்சியும் குறைவாக இருந்தது. சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் மூலம் பரிசோதித்ததில், அவனுக்கு 'அட்லாண்டோ ஆக்சியல் இடப்பெயர்வும்' மற்றும் பிறவியிலேயே இருக்கும் அரிய மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதை நாங்கள் உறுதிசெய்தோம். கழுத்தின் மேல் பகுதியில் மண்டை ஓட்டைத் தாங்கும் எலும்பும், தலை அசைவிற்கு உதவும் எலும்பும் விலகியிருந்தன. இதனால், மண்டை ஓடு மற்றும் மேல் முதுகெலும்புப் பகுதியை நிலைப்படுத்த ஸ்க்ரூக்கள்  பொருத்தப்பட்டன. 

அறுவை சிகிச்சையின் போது தண்டுவடம் மற்றும் நரம்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய 'intraoperative neuro monitoring' எனும் நவீன கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டது.  இவ்வாறு அவர் தெரிவித்தார். மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரவீன் உடனிருந்தார்.