மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், மருதங்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் நியாயவிலை கடையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் வங்கி கணக்கு தொடங்காதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவதற்கான முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்னர், வைத்தீஸ்வரன்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு புறநோயாளிகளுக்கான பதிவு செய்யும் மையம், மருந்தகம், இரத்த பரிசோதனை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, தினசரி மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை, மருந்தகத்தில் மருந்துகள் கையாளும் விவரங்கள் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார். பின்னர், புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மருதங்குடியில் பூசக்குளம் தூர்வாருதல், தடுப்பு சுவர் அமைத்தல், படித்துறை கட்டுதல் போன்ற பணிகள் நடைபெறுவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 9 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் கட்டப்பட்டுள்ளதையும், மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிகளின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
அப்போது கதிரடிக்கும் களம் மிகவும் தரம் குறைவாக உள்ளதாகவும், அதனை சரி செய்யுமாறு ஒப்பந்ததாரரை வலியுத்த அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். அதேபோன்று பூசக்குளம் தூர்வாருதல், தடுப்பு சுவர் அமைத்தல், படித்துறை கட்டுதல் போன்ற பணிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும், குளத்திற்கு தண்ணீர் வந்து செல்லும் வகையில் வழிவகை செய்யவில்லை என அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். இதனை அடுத்து அதனை சரி செய்வதாக அதிகாரிகள் ஆட்சியரிடம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் மக்கள் வளர்ச்சி திட்ட பணிகளை நடைபெறுவதை கண்டு கொள்வதே இல்லை. அவருக்கு உரிய கமிஷன் தொகை சரியான வருகிறதா என்பதை கவனிக்கவும் அளவிற்கு பணிகள் சரியாக நடைபெறுகிறதா என கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
தொடர்ந்து, மருதங்குடி கிராமத்தில் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயனாளி ஒருவர் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடு கட்டுவதற்கான முதற்கட்ட பணியினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் சீர்காழி வட்டம், மணலகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர், சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களில் முடிவுற்ற பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் மற்றும் ஒப்பந்த கால அளவு ஆகியவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சி திட்ட பணிகளை ஒப்பந்த கால தேதிக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளில் திருப்தி இல்லாததால் அதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆட்சியர் எழுப்பிய கேள்விக்கு பதில் இன்றி விழித்தனர். இவ்வாய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, செயற்பொறியாளர் செந்தில்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.