மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எருக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர் என்பவரின் மனைவி பெல்சியா.  இவர்களுக்கு முதல் குழந்தை  அறுவை சிக்கிச்சை மூலம் மருத்துவமணையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 4 -ம் தேதி இவருக்கு  வீட்டிலேயே சுகப்பிரசவத்தின் மூலம் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. முதல் குழந்தை அறுவை சிகிச்சையில் பிறந்ததால் இரண்டாவது குழந்தையும் அறுவை சிகிச்சையில் தான் பிறக்கும் என்பதால் அதை விரும்பாத தம்பதியினர் இரண்டாவது குழந்தையை சுகபிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவுசெய்து  அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரை, ஊசிகள் பயன்படுத்தாமல் சுகபிரசவத்தின் வாயிலாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 




ஆனால் குழந்தை பிறந்து தொப்புள் கொடி விழாமல் இருந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் தம்பதியினரிடம் வீட்டிற்கு நேரடியாக சென்று தாய், சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவே உடனடியாக அரசு  மருத்துவமனைக்கு வாருங்கள் என  108 அவசர ஊர்தி வாகனத்தை வைத்துகொண்டு அழைத்துள்ளனர். ஆனால் தம்பதியினர் மருத்துவமனைக்கு வர மறுத்ததுடன் வீட்டை உள்பக்கம் பூட்டியுள்ளனர். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் அழைத்தும் தங்களுக்கு மருத்துவமனைக்கு வர விருப்பமில்லை என்றும் எங்களை கட்டாயபடுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.




இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், பெல்சியா கருவுற்றதிலிருந்து எந்த ஒரு தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவில்லை என தற்போது தெரியவந்தது. பலமுறை மருத்துவமனைக்கு அழைத்தும் வர மறுப்பதாக கூறினார். சுகபிரசவமான நிலையில் குழந்தையின் தொப்புள் கொடி விழாததால் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல சுகாதார துறை, மருத்துவத்துறை, காவல் துறையினர் நேரில் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே  கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குழந்தையின் தாய் பெல்சியா, தந்தை ஜான் கிறிஸ்டோபர்  மற்றும் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர்  ஆகிய  மூன்று பேர் மீது திட்டுவது, தொப்புள் கொடியை மறைத்து வைத்தது, அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்தது ஆகிய  நான்கு பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில், வீடுகளிலேயே பிரசவம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சுகாதார வட்டம் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட எருக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜான் கிருஸ்டோபர் என்பவரின் மனைவி பெலுசியா என்பவர் கடந்த 04.10.2022 அன்று நண்பகல் 02.10 மணியளவில் தனது வீட்டிலேயே தனது இரண்டாவது குழந்தையை எவ்வித மருத்துவத்துறை மேற்பார்வை உதவிஇன்றி தனது கணவர் மூலமாக ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உள்ளார். 




இதுபோன்று பிரசவம் பார்ப்பதில் பயிற்சி பெற்றவர்களின் உதவி இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதன்காரணமாக தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஜான் கிருஸ்டோபர், அவரது மனைவி பெல்சியா , அவருகளுக்கு உதவிய நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதுபோன்ற இயற்கை ஆர்வலர்கள் என்ற பெயரில் மருத்துவமனை அல்லது பிரசவம் பயிற்சி பெற்ற நபர்கள் உதவி இல்லாமல் பிரசவம் பார்ப்பது தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்பதால் அத்தகைய செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.