தஞ்சாவூர்: செப்டம்பர் 1-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள ‘மாற்றத்தை நோக்கி பேரணி’யை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நிறைவு பெற்றது.

Continues below advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.சக்திவேல் தலைமையில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி தஞ்சாவூர் கீழவாசலில் இந்த பிரச்சார இயக்கம் தொடங்கியது. தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து, செப்டம்பர் 1-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள பேரணியின் நோக்கங்கள் மற்றும் கட்சியின் கோரிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

பிரச்சார இயக்கத்தின்போது, மத்திய அரசின் கடந்த 12 ஆண்டு கால ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறியதாகவும், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Continues below advertisement

மேலும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது, வி.பி.ஜி. ராம்ஜி என்ற மோசடி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும், தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், அனைவருக்கும் தரமான மருத்துவம் மற்றும் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநிலங்களின் மொழி, நதிநீர் உள்ளிட்ட உரிமைகளை பறிக்கக் கூடாது என்றும் பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், வேலையில்லாத காலங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஏரி, குளங்களை தூர்வாரி அவற்றில் நீரை நிரப்பும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி கடன் வழங்க வேண்டும், கடல் வளங்கள் மற்றும் பாக் ஜலசந்தியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாநகர செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தலைமையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கிய இந்த மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் ஆகஸ்ட் 15-ம் தேதி நிறைவு பெற்றது. செப்டம்பர் 1-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள ‘மாற்றத்தை நோக்கி பேரணி’யில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.