மாநில உரிமைகளை மத்தியில் ஆட்சிக்கு வருபவர்கள் பறிக்கின்றனர் - மணியரசன் குற்றச்சாட்டு
தேசிய இனத்தாயக அரசுகளுக்கு, தங்கள் எல்லையில் குடியுரிமை வழங்கும் அதிகாரம் இருக்க வேண்டும். தேசிய இனத்தாயக குடிமக்கள் என்ற வகையிலேயே, இந்தியக் கூட்டரசின் குடிமக்களாகவும் அவர்கள் ஏற்கப்பட வேண்டும்.

தஞ்சாவூர்: மாநில உரிமைகளை மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடிய காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் பறிக்கின்றன. மாநில உரிமையைப் பறிப்பதற்குத்தான் சட்டத் திருத்தம் செய்கின்றனர் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாட்டில் மணியரசன் குற்றம்சாட்டி பேசினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று காலை முதல் மாலை வரை கூட்டரசுக் கோட்பாடு என்ற சிறப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், தேசிய இனத் தாயகங்களின் முழுமையான கூட்டரசாக இந்திய ஒன்றியத்தை மாற்றி அமைக்க வேண்டும். இனத்தாயகங்களுக்கு வகுக்கப்படும் அதிகாரத்தில் கூட்டாட்சி அரசு குறுக்கிடும் அதிகாரம் கூடாது.

அந்தந்த அதிகார மட்டத்தில், அந்தந்த அரசமைப்பு உறுப்பும் இறைமை கொண்டதாக இருக்க வேண்டும். கூட்டாட்சி அரசுக்கும், இனத்தாயக அரசுக்கும் பொது அதிகாரம் எனக் கூறும் ஒத்திசைவு அதிகாரப் பட்டியல் இருக்கவே கூடாது.
தேசிய இனத்தாயக அரசுகளுக்கு, தங்கள், தங்கள் எல்லையில் குடியுரிமை வழங்கும் அதிகாரம் இருக்க வேண்டும். தேசிய இனத்தாயக குடிமக்கள் என்ற வகையிலேயே, இந்தியக் கூட்டரசின் குடிமக்களாகவும் அவர்கள் ஏற்கப்பட வேண்டும்.
இனத்தாயகங்களின் சமநிலை மன்றமாக கூட்டரசு நாடாளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். அனைத்து மொழிவழித் தேசிய இனங்களுக்கும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட சமநிலை மன்றமாக, இந்திய நாடாளுமன்றம் அமைய வேண்டும். தேசிய இனத்தாயக அரசுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு மேலதிகாரம் உள்ள ஆளுநர் என்ற பதவி கூடவே கூடாது.
இனத்தாயகப் பேரவையில் பெரும்பான்மை பெற்றவரை அமைச்சரவை அமைக்க அழைத்தல், பதவியேற்பு செய்வித்தல், தற்காலிக பொறுப்பு ஆட்சி நிறுவுதல் போன்ற பணிகளைச் செய்ய இனத் தாயக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அதிகாரம் வழங்கலாம். ஆட்சிக் கலைப்பு அதிகாரம் கூடாது. தேசிய இன மொழிகள் அனைத்தும் கூட்டரசின் ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும். வரி விதித்துத் திரட்டும் அதிகாரம் முழுவதும் தேசிய இனத்தாயக அரசுகளுக்கே இருக்க வேண்டும். கூட்டரசுக்கு வரி விதிக்கும் அதிகாரம் கூடாது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேசியதாவது: மாநில உரிமைகளை மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடிய காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் பறிக்கின்றன. மாநில உரிமையைப் பறிப்பதற்குத்தான் சட்டத் திருத்தம் செய்கின்றனர். தனித்தனி நாடுகளாக இருந்ததை பிரிட்டிஷ்காரர்கள் ஒன்றாக இணைத்து வைத்தனர். தனித்தனி நாடுகளாக இருக்கும்போது எப்படி உரிமை கிடைக்குமோ? அந்த உரிமை கொடுக்கப்பட்டது.
இந்திய அரசை கூட்டரசாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளி வைத்திருப்பது ஜனநாயக விரோதம். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் பொதுச் செயலர் கி. வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசயோகி கருவூறார் தமிழின குருபீட நிறுவனர் சிம்மம் சத்தியபாமா, முனைவர் கோ. தெய்வநாயகம், வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், தமிழிய வரலாற்று ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன், தமிழின, மொழி ஆய்வாளர் ம.சோ. விக்டர் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.




















