குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி
நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுவினர் மூலமாக விதை விற்பனை நிலையங்களில் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் விதைச் சட்டம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணைகளை மீறி செயல்படும் விதை விற்பனை நிலையங்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் வெ.சுஜாதா எச்சரித்துள்ளார்.
1,434 உரிமம் பெற்ற கடைகள்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 816 மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 618 என இரு மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 1,434 உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், இந்த நிலையங்களில் விதிமுறை மீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதன் ஒரு பகுதியாக, நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுவினர் மூலமாக விதை விற்பனை நிலையங்களில் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
9 கடைகளுக்குத் தடை; 4 நீதிமன்ற வழக்குகள்
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுநாள் வரையிலான காலகட்டத்தில் இரு மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட முறையான ஆய்வுகளில், முளைப்புத்திறன் குறைவாகவும், தரம் இல்லாமலும் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக 9 விதை விற்பனை நிலையங்களுக்கு உடனடியாக விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.5.42 லட்சம் மதிப்பிலான 11,800 கிலோ விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படாமல் அதிரடியாக முடக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தடை செய்யப்படும் தரமற்ற விதைகள் அனைத்தும் எக்காரணம் கொண்டும் மீண்டும் விதைப்புக்குத் தராமல், "விதையில்லா" மாற்றுப் பயன்பாட்டிற்கு (உணவு அல்லது தீவனத் தேவைக்காக) அனுப்பி வைக்கப்படும். இதுதவிர, விதை சட்டங்களை மிகக் கடுமையாக மீறிய தரம் குறைந்த விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது 4 நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டு, தற்போது அவை நீதிமன்ற விசாரணையில் உள்ளன.
விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள்
விதை விற்பனையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்க நிறுவனங்கள் விவசாயிகளின் நலன் கருதி கீழ்க்கண்ட விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது:
உரிமம் மற்றும் விலைப்பட்டியல்: விதை விற்பனை உரிமச் சான்றிதழை (Seed License) நிறுவனத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும். விதைகளின் இருப்பு விவரம் மற்றும் நடப்பு விலைப்பட்டியலை (Price Board) தினசரி கடையின் முகப்பில் வைத்திருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட சான்றட்டைகள்: அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ‘சான்ற அட்டை’ (Certified Tags - Blue/White) பொருத்தப்பட்ட தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தனியார் உண்மை நிலை (Truthful Labelled - TL) விதைகளாக இருந்தால், அதற்கான முளைப்புத்திறன் சான்றினை ஆய்வின் போது அதிகாரிகளிடம் தவறாமல் காண்பிக்க வேண்டும். விற்பனை நிலையத்திலும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்து முடிவுகளை வைத்திருக்க வேண்டும்.
முறையான விற்பனை ரசீது: விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும் போது அதற்கான முறையான ரசீதை (Bill) கட்டாயம் வழங்க வேண்டும். அந்த ரசீதில் விவசாயியின் பெயர், முகவரி, விதையின் ரகம், சான்று நிலை, குவியல் எண் (Lot Number), காலாவதி நாள் மற்றும் விற்பனை செய்யப்பட்ட அளவு ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, விவசாயி மற்றும் விற்பனையாளரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
பருவத்திற்கு ஏற்ற விற்பனை: விற்பனையாளர்கள் ஒரு குறிப்பிட்ட விதைத் ரகத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கக் கூடாது. அந்தந்த மாவட்டத்தின் மண்வளம் மற்றும் நடப்பு ஜூன்/ஜூலை குறுவைப் பருவத்திற்கு (Kuruvai Season) ஏற்ற விதைகளை மட்டுமே உறுதி செய்த பின் விற்பனை செய்ய வேண்டும்.
பாதுகாப்பான சேமிப்பு: விதைகளை ரகம் மற்றும் குவியல் எண் வாரியாகப் பிரித்து, ஒரு அடுக்கில் அதிகபட்சமாக ஆறு மூட்டைகள் மட்டுமே இருக்கும்படி சுத்தமான, காற்றோட்டமுள்ள இடத்தில் மரக்கட்டைகளின் மேல் அடுக்கி வைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் உள்ளிட்ட ரசாயனப் பொருட்களுக்கு அருகே விதைகளைச் சேமித்து வைக்கக் கூடாது. அத்துடன், இருப்புப் பதிவேட்டை (Stock Register) நாளும் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்: விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். முறையான ரசீது இல்லாமல் விதைகளை வாங்கி, பின்னாட்களில் முளைப்புத்திறன் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு கோருவதில் சிக்கல் ஏற்படும். எனவே, விபரம் இல்லாத பில்களைப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.
காலாவதியான விதைகளையோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விதைகளையோ விற்பனை செய்யும் கடைகள் குறித்து, அந்தந்த மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (விதை ஆய்வு) அலுவலகத்தில் விவசாயிகள் உடனடியாகப் புகார் அளிக்கலாம்.
விதிமுறைகளை மீறி தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்படி கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராத நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















