பிளாஸ்டிக் பைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறிவது அபாயகரமான செயலாகும். ஏனென்றால் பொதுமக்கள் பொருட்களை வாங்கி எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் சராசரி ஆயுட்காலம் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அதனை கையில் வாங்குவதற்கும் குப்பையில் எரிவதற்கும் இடையே வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே பிளாஸ்டிக் பை மனிதனுக்குப் பயன்படுகிறது. ஆனால் இந்தப் பை அழிவதற்கு 1000 ஆண்டுகள் ஆகுமாம். இப்பை காலத்திற்கும் அழியாமல் இருந்து சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும்.
ஒருவர் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பை, அவரது பல தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் என்பது பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கும் போது பாலி எத்திலின் என்ற துணை பொருளாகக் கிடைக்கிறது. எரிபொருளை விட 4 மடங்கு அதிக எரிபொருள் காகிதப்பையை உருவாக்கப் பயன்படுகிறது. பிளாஸ்டிக் பைகள் ஆபத்தை ஏற்படுத்த கூடியதால் தடை செய்ய வேண்டும் என கடந்த 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதித்து தமிழகத்தில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவு ஓரிரு மாதங்களில் காற்றில் பறக்கவிடப்ட்டு பொதுமக்கள் வழக்கம்போல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக, மக்களிடையே வித்தியாசத்தை கொண்டு வரவேண்டும் என மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், மஞ்சள் பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கும்பகோணத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொரோனா தடுப்பூசி முகாமிற்கு தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி வருகிறார். அச்சாலைகளில் பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்லும் பொதுமக்களிடம் இருந்து பிளாஸ்டிக் பைகளை பெற்று கொண்டு மஞ்சள் பைகளை வழங்கி வருகிறார். இதுவரை சுமார் 5 ஆயிரம் மஞ்சள் பைகளை இலவசமாத வழங்கியுள்ளார். பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மஞ்சள் பை திட்டத்தை கொண்டு வந்துள்ளதால், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வெகுவாக குறையும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.இதே போல், தஞ்சை அருகே வல்லம் தேர்வுநிலை பேரூராட்சியில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பேரூராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வல்லம் அனைத்து சங்க பேரமைப்பு தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர் முருகையன், செயலாளர் தனபால், கௌரவ தலைவர் பெருமாள் மற்றும் பலர் கலந்துகொண்டு, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுப் பொருளை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.