Kumbakonam New Bus Stand: தீரப்போகுது தலைவலி.. மாறப்போகுது கும்பகோணம் - அமைச்சர் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்

Kumbakonam New Bus Stand: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

Continues below advertisement

தஞ்சாவூர்: கோடையில் ஒரு ஜில் அறிவிப்பு என்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மக்கள் கொடைக்கானல் குளிர்காற்று தங்கள் மீது பட்டது போல் உச்சி குளிர்ந்து போய் உள்ளனர். எதற்காக? என்ன விஷயம் தெரியுங்களா?

Continues below advertisement

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் அறிவித்ததுதான் தற்போது கும்பகோணம் மக்களின் மகிழ்ச்சிக்கு அஸ்திவாரமாக மாறியுள்ளது. 

குடம் என்றால் மேற்கு என்று பொருள். மூக்கு என்றால் மூக்கு போன்று குறுகிய வடிவம் என்று அர்த்தமாகும். அதாவது குடந்தை நகரம் மேற்கே மூக்கு போன்று குறுகியும் கிழக்கில் அகன்றும் விளங்குவதால் குடமூக்கு என்ற பெயரை பெற்றதாக சொல்கிறார்கள்.

சங்க இலக்கியங்களில் குடந்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் 1384-ம் ஆண்டு முதல் கும்பகோணம் என்று அழைக்கப்பட்டது. சாரங்கபாணி கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதை உறுதிபடுத்துகிறது. கும்பகோணம் என்ற சொல் வடமொழி சொல் ஆகும். வடமொழியில் குடம் என்றால் கும்பம், மூக்கு என்றால் கோணம் என்று அர்த்தமாகும். அந்த அடிப்படையில் ஏற்பட்ட கும்பகோணம் என்ற பெயர் கடந்த 600 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

"குடமெடுத்து ஆடிய எந்தை" என்ற பாடல் வரியே குடந்தையாக மாறியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கும்பகோணத்துக்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டனம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம், சாரங்கராஜன்பட்டினம், சேந்திரசாரம், ஒளிர்மிகு பட்டணம் உள்பட பல பெயர்கள் இருந்தன. இந்த பெயர்கள் தற்போது வழக்கில் இல்லை.

கும்பகோணம் நகரில் 100-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் கோயில்கள் உள்ளன. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தன்னுடைய திருக்குடந்தை புராணம், மங்களாம்பிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களில் கும்பேசுவரரையும், மங்களாம்பிகையையும் போற்றி பாடியுள்ளார். இத்தகைய பெருமை வாய்ந்த கும்பகோணத்தில் பேருந்து நிலையம் என்பது இட நெருக்கடியுடன் தான் செயல்பட்டு வருகிறது. 

வளர்ந்து வரும் நகரமான கும்பகோணத்திற்கு பக்கத்து மாவட்டத்தில் இருந்தும் மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் கும்பகோணம் பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் நெரிசலுடன் காணப்படுகிறது. இந்நிலையில்தான் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. தற்போது துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். விவாதங்கள் மீது பதிலுரை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு, “கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

ஈரோடு மாநகராட்சி, ஆற்காடு, இராணிப்பேட்டை நகராட்சிகளின் பேருந்து நிலையங்களில் கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும். இவை ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “கடலூர், தஞ்சாவூர் மாநகராட்சிகள், ஆரணி, உடுமலைப்பேட்டை, காரமடை, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், குடியாத்தம், அல்லிநகரம், கொமார பாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி,விருதுநகர் ஆகிய நகராட்சிகளிலுள்ள பேருந்து நிலையங்கள் ரூ.84.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்” என்றும் அறிவித்தார்.

கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு மக்களுக்கு கொளுத்தும் வெயிலில் ஜில்லுன்னு இளநீர் குடித்தது போல் இருக்கிறது. அறிவிப்பை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Continues below advertisement