குடவாசல் கல்லூரியை வேறு ஊருக்கு மாற்றம் செய்வதில் நியாயம் இல்லை என்று கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கருத்து கூறினார். 


திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே கிடாரம்கொண்டானில் திருவிக அரசு கலைக் கல்லூரி மட்டும் செயல்பட்டு வந்தது இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கலைக் கல்லூரி என்பது தொடங்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியை நம்பி குடவாசல் மூலங்குடி, சேங்காளிபுரம், மஞ்சக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாய கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி தொடங்கப்பட்ட நாளிலிருந்து குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்லூரி இதுவரை செயல்பட்டு வருகிறது. இதுவரை கட்டிட வசதிகள் ஏதுமில்லாத காரணத்தினால் மாணவர்கள் கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கடந்த நான்கு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் குடவாசலில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் இடமாற்றம் செய்யப் போவதாக அறிவிப்பானது வெளியானது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு மாத காலமாக கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




குறிப்பாக இந்த கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது குடவாசல் பகுதியிலேயே இடம் அமைத்து புதிய கட்டிட வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து பேராசிரியர்களை நியமனம் செய்து கல்லூரியை செயல்படுத்த வேண்டும் எனக் கூறி கடந்த மூன்று தினங்களாக கல்லூரி மாணவ மாணவிகள் குடவாசல் பேருந்து நிலையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் எம்எல்ஏ பேசியதாவது: அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டத்தில், குடவாசலில் டாக்டர்  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரி உட்பட 3 கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக குடவாசல் கல்லூரி என்பது நன்னிலம் திருவாரூர் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து செல்லக்கூடிய வகையில் வசதியான இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த கல்லூரியை வேறு ஊருக்கு மாற்றுவது கண்டனத்துக்குரியது அதிமுக ஆட்சி காலத்தில் முயற்சி செய்து கொண்டு வரப்பட்ட இந்த கல்லூரியைப் போன்று தாங்களும் புதிதாக கல்லூரிகளை திறந்து மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வியை படிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் அதை விடுத்து கல்லூரியை வேறு ஊருக்கு மாற்றம் செய்வது என்பது நியாயமான செயல் அல்ல.




மேலும் கடந்த ஆட்சியின் போது இக்கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அரசிடம் பெற்று தயார் நிலையில் இருந்த போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குடவாசல் கல்லூரி கட்டிடம் தொடர்பான பணிகள் நின்று போய்விட்டன தொடர்ச்சியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக நான் தமிழக அரசை அணுகி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தேவைப்படும் பட்சத்தில் தனியார் இடத்தையும் விலைக்கு வாங்கி கட்டுவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள தயாராக உள்ளோம் இத்தகைய சூழலில் இந்த கல்லூரி வேறு ஊருக்கு மாற்றம் செய்யப்படுவதை கல்லூரி மாணவர்களே விரும்பாத நிலையில் தான் விடுமுறை நாள் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் இன்றைய தினம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவே மாணவர்களின் உணவு புரிந்து கொண்டு தமிழக அரசு குடவாசல் பகுதியில் கல்லூரி அமைவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் பார்வை கொண்டு பார்க்கக் கூடாது என தெரிவித்தார்.