தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் செம பாய்ச்சல் காட்டின பாய்ந்தன. முன்னதாக உறுதிமொழி போட்டியை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். 


தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாதா கோவில் தெருவில் வாடிவாசல் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்தன.


வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டன. காளைகளும், வீரர்களுக்கும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாமல் இருப்பதை தடுக்க சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.




மாடு பிடி வீரர்களை களத்துக்குள் அனுப்புவதற்கு தனி பாதை ஏற்படுத்தப்பட்டது. காயம் அடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. இதற்காகவும் தனிப்பாதை அமைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற விழாக்குழுவினர் அறிவித்தனர். இதன்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாட்டுடன் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தில் தங்களை பற்றி பதிவு செய்து கொண்டனர்.


ஆன்லைன் டோக்கன் முறைப்படி வரிசையாக மட்டுமே காளைகள் உள்ளே அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். விழாவிற்கு வருபவர்கள், விழாக்குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விழாக்குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன. கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் (பொ) டாக்டர் சுப்பையா, உதவி இயக்குனர்கள் அன்பு செழியன், கண்ணன், புருஷோத்தமன், ரவிச்சந்திரன், ஜான் சாமுவேல், டாக்டர்கள் கமலக்கண்ணன், முகமது ஷெரீப  உரிய சோதனைகளை மேற்கொண்டனர். மேலும் 350 மாடுபிடி வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தனர்.
 
ஜல்லிக்கட்டு போட்டியை காலை 6.45 மணியளவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் (பொ) அருள் பிரகாசம், திருக்கானூர்பட்டி பங்குதந்தை தேவதாஸ் இக்னேசியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் அருளானந்தசாமி, இந்து ஜனநாயக கட்சி போராட்டக் குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், ஊராட்சி தலைவர் சேவியர், பார்க்கவ முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் திருமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


தஞ்சை மாவட்ட எஸ்பி ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில், வல்லம் டிஎஸ்பி., நித்யா மற்றும் 700 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ஆரோக்கியராஜ், தனிஸ்லாஸ், பிலிப், திவ்ய நாதன், ஆரோக்கியசாமி, அடைக்கலம், ஜான் பீட்டர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை 20க்கும் அதிகமான வெளிநாட்டினரும் கண்டு ரசித்தனர்.


ஜல்லிகட்டு போட்டியை ஒட்டி திருக்கானூர்பட்டியில் உள்ள அனைத்து வீடுகளிலும் போட்டியை பார்க்க வந்தவர்கள், பங்கேற்றவர்கள் என அனைவரும் உணவு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 
 
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. பல காளைகளை வீரர்கள் அடக்க முடியாமல் திணறினர். சில காளைகள் சுற்றி சுற்றி வந்து மாடு பிடி வீர்ரகளை தூக்கி வீசின. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், கட்டில், எவர்சில்வர் , பித்தளை தவளை, குடம், மிக்ஸி என்று ஏராளமான பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.