மன்னர் ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபம் பணிகள் நிறைவடையும் நிலை?
நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகம் ரூ.3.02 கோடியில் கட்டப்படுகிறது. மறைந்த மன்னர் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமாகவும் செயல்படும்.

தஞ்சாவூர்: புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு கட்டப்பட்டும் வரும் மணிமண்டபம் பணிகள் இந்த மாதத்திற்குள் நிறைவடையும் என்று தெரிய வந்துள்ளது. ஒரு வருடமாக நடந்து வரும் இந்த பணிகள் நிறைவடைந்து எப்போது திறப்பு விழா நடக்கும் என்று புதுக்கோட்டை மக்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தென்கிழக்கு மூலையில் சுமார் 760.50 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மொத்த செலவு ரூ.3.02 கோடி ஆகும். இந்த நினைவுச் சின்னம், மறைந்த மன்னர் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமாகவும் செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 530 பேர் அமரக்கூடிய ஒரு பெரிய கூட்ட அரங்கமும், முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்கான ஓய்வறைகளும் இதில் அமைக்கப்படும்.
மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு நினைவு மணிமண்டபப் பணிகளை கடந்த மாதம் அமைச்சர்கள் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டு சென்றனர். தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நினைவாக, அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.பி. சாமிநாதன் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி ஆகியோர் கடந்த மாதத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது நினைவு சின்னத்தின் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி, ஆலோசனைகளையும் வழங்கி சென்றனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் இந்த நினைவுச் சின்னம், மன்னரின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் பொருட்களையும், 530 பேர் அமரக்கூடிய கூட்ட அரங்கம் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான ஓய்வறைகளையும் கொண்டிருக்கும். கடந்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர்களில் ஒருவரான ராஜா ராஜகோபால தொண்டைமான், தனது ஆட்சியின் போது பல மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது நினைவாக இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படுவது, அவரது பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாகும்.
தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான், தனது பதவிக்காலத்தில் மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்தார்.
மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டையை முன்னேற்றும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1974-ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். அப்போது கலைஞர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க மன்னர் ராஜகோபால தொண்டைமான், தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசுக்கு வழங்கினார்.
அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மன்னரின் உருவச்சிலையை கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு ‘மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை’ என்று பெயர் சூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.























