தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி சிறப்பான முறையில் பணியாற்றியமைக்காக மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் பாராட்டு நற்சான்றிதழ் வழங்கினார். 


சிறப்பாக பணியாற்றிமைக்காக பாராட்டு


தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து 7வது முறையாக தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றது. இதையடுத்து கரந்தை, மகர்நோன்புசாவடி சீனிவாசபுரம் ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் சிறப்பான இடம் பெற்றதற்கு வழி நடத்தியது. 


தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தாய் சேய்நல கண்காணிப்பு மையம் அமைத்து தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 1720 கர்ப்பிணி தாய்மார்களின் மகப்பேறு மருத்துவ சேவைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவது, தமிழகத்திலேயே முதன்முறையாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு என உதவி மையம் அமைத்து பணியாற்றி வருவது, கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் பயன்பெறும் வகையில் தாய்மை நூலகம் அமைத்தது.


தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணி தாய்மார்களின் நலன் கருதி  ‘அக்கறை ‘ சிறப்பு பிரிவு அமைத்து இதுவரை 546 கர்ப்பிணி தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து அவர்களின் சுகாதாரக் குறியீடுகள் கண்காணிக்கப்பட்டு வருவது, குறிப்பாக தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனையில் தேங்கி கிடந்த 50 டன் குப்பைகளை தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குழுவை ஈடுபடுத்தி தூய்மை பணிகளை மேற்கொண்டு வருவது உள்ளிட்ட சிறப்பான பணிகளை பாராட்டி மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம், மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்திக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனையடுத்து டாக்டர்.வீ.சி. சுபாஷ்காந்திக்கு, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்  சண்.இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


அறிவாலயத்தில் சுதந்திர தினவிழா


தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தேசியக்கொடியை ஏற்றினார். தஞ்சை எம்பி முரசொலி,  மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.


இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி மாவட்ட பொருளாளர் முனைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு   உறுப்பினர்   வக்கீல்  சந்திரகுமார் தேசியக் கொடியை   ஏற்றினார். மாநகர செயலாளர் முத்துகுமரன், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி, மாநகர குழு செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். விவசாய தொழிலாளர் சங்க முதுபெரும் தோழர் சங்கிலிமுத்துக்கு ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.