தஞ்சாவூர்: பெரிய கோயில்... இந்த வார்த்தை உலக மக்கள் மத்தியில் வெகு பிரசித்தம். தஞ்சை தரணி மக்களாலும் உலக தமிழர்களாலும் பெருமிதத்துடன் அழைக்கப்படும் பெரிய கோயில் என்கிற பிரகதீஸ்வரர் கோவில் கி.பி 1006ம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் கட்டப்பட்டது. 

இன்றளவும் தமிழரின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக விண்ணுயர்ந்து யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தானே.

கருவறையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். பொதுவாக அஸ்திவாரம் என்பது ஒரு கட்டிடத்தின் பாரத்தை தாங்கும் ஆதார சக்தியாகும். கட்டிடம் எந்த அளவுக்கு உயரமாக கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதன் அஸ்திவாரமும் வலுவாக, ஆழமாக இருக்கவேண்டும்.

216 அடி உயரத்துடனும், முழுக்க முழுக்க அதிக எடைகொண்ட கிரானைட் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு எந்த அளவுக்கு அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும். இவ்வாறு உலக நாட்டவர்கள் அனைவரும் வியந்து பேசும் பெரிய கோயிலின் பெருமையை சிதைக்கும் வகையில் சில சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மிகவும் புனித தலமாக அனைத்து தரப்பு மக்களாலும் பார்க்கப்படும் தஞ்சை பெரியக்கோயிலை வருமானத்திற்காகவும், சமூக வலைதளங்களில் பிரபலமாகுவதற்காகவும் சிலர் பயன்படுத்துவது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது. புனிதத்தை கெடுக்கும் வகையில் கோயிலுக்குள் பனராஸ் பட்டுக்கட்டி மல்லிகைப் பூ கொண்டை வச்சி, சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா என்ற சினிமா பாடலுக்கும், மதுரைக்கு போகாதடி ஆகிய பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் பதிவிட்டு இருக்கிறார்கள். கோயில் பாதுகாப்பு பணியில் போலீசார், தனியார் செக்யூரிட்டிகள் என 25 பேருக்கும் மேல் உள்ள நிலையில் இது போன்று நடனம் ஆடுவதை ஒருவர் கூட கண்டிக்கவில்லையா என கேள்வி எழும்பி உள்ளது. 

பிரபலம் ஆவதற்காக பெரிய கோயிலை பயன்படுத்தும் இது போன்ற நபர்களால் வெளிநாட்டவர்கள் மத்தியில் மிகவும் உயர்ந்ததாக பார்க்கப்படும் இக்கோயிலின் புனிதம் கேள்விக்குறியாகி வருகிறது. இதுபோன்று ஏற்கனவே சில ரீல்ஸ் எடுக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இது பக்தர்கள் மத்தியில் முகம் சுளிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. கோயில் போன்ற புனித ஸ்தலங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க விட்டு ரிலீஸ் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.