திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி மற்றும் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் செயல்பட்டு வருவதால் பெரும்பாலான காலங்களில் மழை பெய்து நெல் மூட்டைகள் வீணாகி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவை லாரிகள் மூலம் திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் உள்ள அரசு சேமிப்பு நெல் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக திறந்த வெளி நெல் கிடங்குகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தார்பாய் கொண்டு நெல் மூட்டைகள் மூடி வைக்கப்பட்டபோதும் மழையில் நனைந்து நெல் மணிகள் மூடையிளேயே முளைக்க தொடங்கின. காரியமங்களம், சேந்தமங்கலம், இருள்நீக்கி, ஆலத்தூர், அகரவயல், புழுதிக்குடி, நெம்மேலி உள்ளிட்ட கிராமங்களில் தற்காலிக திறந்த வெளி நெல் கிடங்குகளில் வைக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் நெல் முட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்துள்ளது.
நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு ஓரிரு தினங்களில் லாரிகள் மூலமாக அரசு அதிகாரிகள் நெல் கிடங்கிற்கு எடுத்துச் சென்றால் இதேபோன்று சேதம் ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், பல திறந்தவெளி கிடங்குகளில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கு எடுத்துச் செல்வதே இதேபோன்று மழையில் நினைந்து நெல்மணிகள் முளைக்க தொடங்குவதற்கு முக்கியமான காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே இனிவரும் காலங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்த உடனேயே சேமிப்புக் கிடங்கிற்கு நெல் மூட்டைகளை நகர்வு செய்ய வேண்டும்.
தற்பொழுது சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் இரண்டு மாத காலங்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக தரமான கட்டிடங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அந்தக் கட்டிடங்களின் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டால் மட்டுமே நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க முடியும் இல்லை என்றால் தற்பொழுது மழையில் நனைந்து வீணாகி உள்ள நெல் மணிகள் அரவை செய்யப்பட்டு அந்த அரிசிதான் ரேஷன் கடைகள் மூலமாக மீண்டும் பொதுமக்களுக்கு தரமற்ற அரசியாக வழங்கப்படும் நிலை ஏற்படும் ஆகவே இதேபோன்ற நிலை ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கான்கிரீட் கட்டிடங்கள் அமைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.