தஞ்சாவூர்: சுள்ளென்று கொளுத்தும் வெயிலுக்கு ஜில்லுன்னு ஐஸ்கிரீமையும், குளிர்பானங்களையும் தேடி ஓடுகின்றனர் மக்கள். வெயிலுக்கு இதமளித்தாலும் மக்கள் உடல்நலனை பாதிக்கும் வகையில் இவற்றில் கலப்படம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்துள்ளது. 

Continues below advertisement

தமிழகத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்பை கண்காணிக்கும்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் விற்பனை வெகுவாக சூடுபிடித்துள்ளது. ஜில்லுன்னு இருக்கணும் என்று மக்கள் நம்பிக்கையுடன் வாங்கி சாப்பிடும் இவற்றில் கலப்படம் செய்யப்பட்டால் வெகுவாக பாதிப்பு ஏற்படும்.

கோடை கால தேவை அதிகமாக உள்ளதால், உரிய உரிமம் இல்லாமல் ஐஸ்கிரீம் தயாரிப்பது, லாபத்தை அதிகரிக்க ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் செய்வது போன்ற முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்க, மாநிலம் முழுதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும் என, துறையின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Continues below advertisement

இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை பிறப்பித்துள்ள உத்தரவில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா?  இயற்கை சர்க்கரைக்கு மாறாக, தரம் குறைந்த சுவையூட்டிகள், செயற்கை நிறமிகள் மற்றும் ஆபத்தான வேதிப்பொருட்களை கலப்பது, குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் மற்றும் சலவைத்துாள் கூட்டுப் பொருட்களை சேர்ப்பது, சுகாதாரமற்ற நீரை பயன்படுத்துவது போன்றவற்றை தடுக்க, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானம் உற்பத்தி நிறுவனங்களில் தொடர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

தயாரிப்பு நிறுவனங்கள் முறையாக உரிமம் வாங்கி உள்ளனவா, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உறைகளில் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். மூலப்பொருட்களின் தரத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், மாவட்டத்தில் செயல்படும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான உற்பத்தி நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் இயங்கும் உற்பத்தி நிலையங்களில் சுகாதார நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரிகள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனைகள் நடத்தி, உற்பத்தியில் பயன்படுத்தப்படும் நீர், பால், சர்க்கரை உள்ளிட்ட மூலப்பொருட்களின் தரத்தையும், தயாரிப்பு முறைகளின் சுத்தத்தையும் பரிசோதிக்க வேண்டும்.

மேலும், தயாரிப்பு நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துகிறார்களா, காலாவதி ஆன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது அவசியம் என்பதால், இந்த கண்காணிப்பு நடவடிக்கை மேலும் வலுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தையில் விற்பனை செய்யப்படும் தயாரிப்புகளும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களும் உணவு பொருட்களை வாங்கும் போது தரம், காலாவதி தேதி போன்றவற்றை சரிபார்க்க வேண்டுமெனவும், ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.