தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை, சுவாமி நகரைச் சேர்ந்தவர் சக்திகுமார் (29). கேட்டரிங் தொழிலாளி. வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு தற்போது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இவரது மனைவி ஆனந்த வைரமணி (28). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளான நிலையில், இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சக்திகுமாருக்கும், ஆனந்த வைரமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தனது மனைவி ஆனந்த வைரமணியை, குடும்பம் நடத்த அழைப்பதற்காக சக்திகுமார் சென்றார். அப்போது, இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சக்திகுமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்த வைரமணியை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சுவாமிமலை போலீசுக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆனந்த வைரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சுவாமிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை வழக்கு தொடர்பாக கும்பகோணத்தில் 2 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் நாட்டரசன்பட்டு காஞ்சிவாக்கம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் மகன் விஜயகுமார்(25). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றினார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் வெளியில் சென்றால் வழக்கமாக சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வரும் விஜயகுமார் நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அவரை தாய் சாந்தி தேடி சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்புறம் உள்ள எல்லையம்மன் கோவில் குளத்தின் அருகே சென்றபோது அந்த பகுதியில் அமர்ந்திருந்த அம்பேத்கர் தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் கோகுல்(26), அவரது தம்பி மாதவன்(24) ஆகிய 2 பேரும் சாந்தியை தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். தொடா்ந்து குளத்தின் படிக்கட்டு அருகே சென்றபோது அங்கு விஜயகுமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
உடனே சாந்தி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சோதனை செய்த டாக்டர்கள் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விஜயகுமார் தாய் சாந்தி காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல், மாதவன் ஆகிய 2 பேரை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று கும்பகோணம் புதிய பஸ் நிலையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முகில்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர் .
அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் 2 பேரும் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிவாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த தங்கத்துரை மகன்கள் கோகுல்(26), மாதவன்(24) ஆகியோர் என்பதும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. உடனே அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரிடம் கும்பகோணம் போலீசார் ஒப்படைத்தனர்.
