உடன்பாடு இல்லாதவர்கள் இணைந்த கூட்டணி எப்படி வெற்றி பெறும்: எம்.பி., கனிமொழி விமர்சனம்
தி.மு.க., மறுபடியும் வெற்றிபெற வேண்டும் என்பதில், உறுதியாக இருக்கிறார்கள் என்பதை எடுத்து சொல்லக்கூடிய மாநாடாக, தஞ்சையில் நடைபெறும் மாநாடு நிச்சயமாக அமையும்

தஞ்சாவூர்: உடன்பாடு இல்லாதவர்கள் இணைந்து, ஒரு கூட்டணியை உருவாக்கினால், அது எப்படி வெற்றி பெற முடியும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்தார்.
வெல்லும் தமிழ் பெண்கள் திமுக மகளிர் அணி டெல்டா மண்டல மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக வரும் 26ம் தேதி நடக்கிறது. இந்த 200 ஏக்கரில் 100 ஏக்கரில் மாநாட்டு பந்தலும், வாகனங்கள் நிறுத்த 100 ஏக்கரும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் முன்னேற்பாடு பணிகள் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு மேற்பார்வையில் மும்முரமாக நடந்து வருகிறது.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்ற, திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு முன்னிலையில், துணைப் பொதுச் செயலாளர் எம்.பி., கனிமொழி தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு வரும் 26ம் தேதி மாலை 4 மணி அளவில் பிரமாண்டமாக நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.ராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன் உட்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர்.
200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக இந்த மாநாடு நடக்கிறது. 100 ஏக்கரில் மாநாட்டு நடக்கும் பகுதியில் மகளிரணியினர் அமர்வதற்கான இடம் தூய்மைப்படுத்தும் பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. 100 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை நேற்று மாலை எம்.பி.,கனிமொழி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கு மண்டலத்தில், வெல்லும் தமிழ் பெண்கள், மகளிர் அணி மாநாடு, வெற்றிகரமாக நடந்துள்ளது. அம்மாநாடு, பெண்களின் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது, என்பதை எல்லோருக்கும் மிக தெளிவாக எடுத்து சொல்லக்கூடிய வகையில்ல அமைந்திருந்தது.
தமிழகம் முழுவதும் பெண்கள் தி.மு.க.,வை சார்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தி.மு.க., மறுபடியும் வெற்றிபெற வேண்டும் என்பதில், உறுதியாக இருக்கிறார்கள் என்பதை எடுத்து சொல்லக்கூடிய மாநாடாக, தஞ்சையில் நடைபெறும் மாநாடு நிச்சயமாக அமையும் என நான் நம்புகிறேன். சுமார் 1. 25 லட்சம் மகளிருக்கு மேல் இந்த மாநாட்டிலே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை. சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அ.தி.மு.க., ஏற்கனவே திட்டமாக அறிவித்ததை, அவர்கள் செயல்படுத்தாமல் மறந்துவிட்டார்கள். பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை, பிரதமரை அழைத்து, ஒரு திட்டமாக அறிவித்தார்கள். அதை யாருக்கும் கொடுக்காததால், அதை மறந்து விட்டு, மறுபடியும் தேர்தல் அறிவிப்பாக அறிவித்துள்ளார்கள். எனவே, அதை பற்றி கருத்து சொல்வதற்கு என்ன இருக்கு?
தி.மு. க., கூட்டணி, மக்களோடு இருக்கக்கூடிய கூட்டணி. முதல்வர் இத்தனை ஆண்டுகளாக, மக்களுக்காக செய்து இருக்கும் சாதனைகளை உணர்ந்த கூட்டணி. எங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். அவர்கள் யாரை சேர்த்தாலும், உடன்பாடு இல்லாதவர்கள் இணைந்து, ஒரு கூட்டணியை உருவாக்கினால், அது எப்படி வெற்றி பெற முடியும். நாங்க தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருப்பது, இன்னும் கொஞ்சம் நாள் அ.தி.மு.க., பத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுக்கு எல்லாருக்குமே கவலையாக இருக்கிறது. அ.தி.மு.க.,வின் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது தெளிவாக சொல்லுகிறது. தேர்தல் வருவதால், பிரதமர் மோடி தமிழகத்திற்கு நிறைய முறை வருகை தருவார். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி, எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய செயலாளர் அருளானந்தம், வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.





















