குரு பார்க்க கோடி நன்மை… நாளைக்கு மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார்: திட்டைக்கு வாங்க பக்தர்களே!!!
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நவக்கிரக குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அருகே திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சன்னதியின் விமானத்தில் சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதி வினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகின்றது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவன் கோவிலிலும் காண முடியாது.
இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் எனவும், வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனதால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார். நவக்கிரகங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர் குருபகவான். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குருபகவானுக்கு உண்டு.
அனைத்து சிவன் கோயில்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிப்படுகிறார். ஆனால் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நவக்கிரக குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த ஒரு சிவன் கோயிலிலும் இல்லை.
குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். இதனால் அவரவர் ராசிக்கு ஏற்ப பலன்கள் ஏற்படும். குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உருவானது. எனவே குருப்பெயர்ச்சி நடைபெறும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் குருபகவானை வழிபடுவது அவசியம். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை யொட்டி பிற்பகல் 1.19 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிர வேசிக்க இருக்கிறார். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசியினர் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.
குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு வசதியாக தடுப்பு கட்டைகளை கொண்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
குருப்பெயர்ச்சி விழாவையொட்டி வருகிற 23ம் தேதி லட்சார்ச்சனையும், 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அசோக் குமார், தக்கார் விக்னேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். திட்டை கோயிலில் உள்ள குரு பகவானை வழிபட தஞ்சை பகுதி மக்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த மக்களும் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் குடும்பத்தினருடன் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மும்முரமாக செய்யப்படுகிறது.





















