தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோயிலில் திருப்பணிகள் செய்து உள்ளார்.

தஞ்சாவூர்: வைகாசி விசாகத்தை ஒட்டி பழமை வாய்ந்த தஞ்சை கருணாசாமி கோயிலில் இன்று ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் என்கிற அருள்மிகு வசிஷ்டேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது.
தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோயிலில் திருப்பணிகள் செய்து உள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும்,கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது.
இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 1988 ஆம் ஆண்டு வரை வைகாசி மாத உற்சவம் கண்ணாடி பல்லக்கு, மற்றும் வெட்டிவேர் பல்லக்கு ஆகியவை ஏழு ஊர்களை சுற்றி வரும் விழா நடைபெற்றது. காலபோக்கில் விழா தடைபட்ட நிலை நிலையில் தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் ஏழூர் பல்லாக்கு திருவிழா கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து இந்தாண்டு வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஏழுர் கண்ணாடி பல்லக்கு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. கடந்த 29ம் தேதி தேரோட்டமும், 30-ந்தேதி வைசாக தீர்த்த வாரியும் நடந்தது. நேற்று பிச்சாண்டவர் புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்குத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட பெரிய கண்ணாடி பல்லக்கில் பெரியநாயகி உடனாகிய கருணாசுவாமி என்ற வசிஷ்டேஸ்வரர் எழுந்தருளினார். அதேபோல் சிறிய வெட்டிவேர் பல்லக்கில் மணக்கோலத்தில் அருந்ததி தேவி உடனுறை வசிஷ்டர் எழுந்தருளினர். இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிவகணங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கினை தோளில் சுமந்தபடி கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.
பின்னர் பல்லக்குகள் ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களான கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோயில், வெண்ணாற்றங்கரை தஞ்சைபுரீஸ்வரர் கோயில், திருதென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில், கூடலூர் திருக்கூடலம்பதி சொக்கநாதர் கோயில், கடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோயில், திருப்புன்னை நல்லூர் கைலாசநாதர் கோயில், கீழவாசல் பூமாலை வைத்தியநாதர் கோயில் ஆகிய ஏழு ஊர்களுக்கும் கண்ணாடிப் பல்லக்கு, வெட்டிவேர் பல்லக்குச் புறப்பட்டு சென்றன. இந்தப் பல்லக்குகள் அந்தந்தக் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கு பெற்று, கோயில் மரியாதையை ஏற்றுக் கொள்கின்றனர்.
பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு கரந்தை கருணாசாமி கோயில் முன்பு பல்லக்குகள் வந்து சேரும். அப்போது இறைவனுக்கு பொம்மைப்பூ போடும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, செயல் அலுவலர் சுந்தரராசு, கண்காணிப்பாளர் ரவி, மேற்பார்வையாளர் ரமேஷ் மற்றும் ஆடிட்டர் ரவிச்சந்திரன், கயிலை ராமநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















