அண்ணனால் தனக்கும் தன் காதலன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கரம் பிடித்த கணவணையும்  தன்னையும் ஆணவக்கொலை செய்யும் முன் பாதுகாப்பு வழங்குங்கள் எனவும் எஸ் பி அலுவலகத்திற்கு, கழுத்தில் மண மாலையுடன் வந்த இளம் ஜோடியால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டது.


நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள குறுக்கத்தி பள்ளிச்சந்தம் தெருவை சேர்ந்த கண்ணதாசன் மகன் இளம்பரிதி. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும் (23). கீழ்வேளூர் அரசாணி குளத்தைச் சேர்ந்த வீரையன்  மகள் சௌமியாவிற்கும் (19) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இரு வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதல் இருவீட்டாருக்கும் தெரிய வரவே, பெண் வீட்டாரிடம் இருந்து இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.




இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய இளம் காதலர்கள் ஆன இளம்பருதியும், சௌமியாவும்  நண்பர்களின் உதவியுடன் சென்னையில் உள்ள கோவிலில் கடந்த 22 ஆம் தேதி தாலி கட்டி திருமணம் செய்துள்ளனர்.  இவர்களின் திருமண செய்தியறிந்த சௌமியாவின் அண்ணன் பிரகதீஸ்வரன் இருவரையும் ஆணவக் கொலை செய்து விடுவேன் என, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த இளம் ஜோடிகள் இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை மாவட்ட தொகுதி செயலாளர் அறிவழகன் மற்றும் அவரது நண்பர்களுடன் இன்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கழுத்தில் மணமாலையுடன் புகார் அளிக்க வந்தனர்.




அப்போது அண்ணனால் தனக்கும் தான் காதலித்து கரம்பிடித்த காதல் கணவணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனவே  ஆணவக்கொலை நடைபெறும் முன் தங்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹரிடம் அவர்கள் புகார் அளித்தனர். நாகையில் அண்ணனால் ஆணவக் கொலை நடைபெறும் முன் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க என கோரி நாகை எஸ்பி அலுவலகத்தில் இளம் காதல் ஜோடிகள் நண்பர்களுடன் புகார் அளிக்க வந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண