மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் மீனவர் கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 350 விசைப்படகு, மற்றும் 1000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்மூலம் இந்த மீன்பிடி துறைமுகத்தில் நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இத்துறைமுகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு மீன் மற்றும் உலர் கருவாடு ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பழையாறு துறைமுகத்தில் உள்ள மீன் ஏலக்கூடம் சிறுக சிறுக பழுதடைந்தது. அதனை தொடர்ந்து அங்கு அமைக்கபட்டுள்ள 8 டன் கொள்ளளவு கொண்ட மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு முற்றிலும் சிதைந்து பயனற்று கிடக்கிறது.
இதனால் ஒவ்வொரு மீனவரும் தனியாக மீன்களை பதப்படுத்த சாதாரண பிளாஸ்டிக் பெட்டிகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விலையுயர்ந்த மீன்களை கூட சேமித்து வைக்க முடியாமல் கிடைக்கும் விலைக்கு உடனே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் ஏலக்கூடம் பராமரிப்பு இல்லாததால் துறைமுக வளாகத்திலேயே மீன்களை ஏலம் விட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கள் உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியாத சூழலுக்கு தள்ளளப்பட்டுள்ளதாகவும் இதனை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பழையாறு மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தை சீரமைத்தும் புதிய மீன் சேமிப்பு குளிர்சாதன கிடங்கு அமைத்து தர வேண்டு எனவும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், மழை புயல் வெள்ளம் என இயற்கை சீற்றம் எது ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தான் என்றும், அதுவும் மழை வெள்ள காலங்களில் கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுவிடும், அதுபோன்று ஆண்டுக்கு இரண்டு மாதகாலம் மீன்பிடி தடை காலம் என வருடத்தில் ஆறு மாத காலங்கள் மட்டுமே தாங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் வரும் வருமானத்தை கொண்டு தங்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும் படிக்க வைத்து உருவாக்க வேண்டும் என்றும்.
அதற்காக தாங்கள் கடலில் சென்று பிடித்து வரும் மீன்களை உரிய முறையில் பதப்படுத்தி வைத்திருந்து விற்பனை செய்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்தை காக்க முடியும் எனவும் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் மீன்பிடி துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் ஏல கூடத்தையும் அதில் அமைந்துள்ள குளிர்சாதன கிடங்கையும் சீரமைத்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.