தன் கன்று குட்டிக்காக இரவு முழுவதும் ஆற்றின் நடுத்திட்டில் நின்ற தாய் பசு... தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்பு
தகவலின் பேரில் விரைந்து வந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் ஆற்றில் நீந்தி சென்று கன்று குட்டியை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றின் நடுத்திட்டில் சிக்கி தவித்த கன்று ஈன்ற பசுமாட்டை விரைந்து செயல்பட்டு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். காலையில் பசு மாட்டை அவிழ்த்து விட்டால் மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி விடும். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் ரமேஷ் நேற்று முன்தினம் இரவு பல இடங்களிலும் பசுமாட்டை தேடிப்பார்த்துள்ளார்.
தொடர்ந்து நேற்று காலையும் மாட்டினை தேடி சென்றுள்ளார். பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். பின்னர் அப்பகுதியில் ஓடும் காவிரி ஆற்றின் கரையில் எங்காவது மேய்ந்து கொண்டு உள்ளதாக என்று பார்த்துக் கொண்டே சென்றவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் நடுத்திட்டில் (மண் மேடு) மாடு கன்றை ஈன்று கரைக்கு வர முடியாமல் தவித்து கொண்டு இருந்ததை ரமேஷ் பார்த்துள்ளார்.
தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் ஆற்றில் நீந்தி சென்று கன்று குட்டியை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாடு தானாக நீந்தி கரைக்கு வந்துள்ளது. கன்று இருந்ததால் பசு மாடு அங்கேயே தவித்துக் கொண்டு நின்றுள்ளது.. கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், கன்று ஈன்ற பசு தன் குட்டியை விட்டு நகராமல் அங்கேயே இரவு முழுவதும் பாதுகாப்பாக இருந்துள்ளது. வழக்கமாக மேய்ச்சலுக்கு செல்லும் போது அக்கரைக்கு நீந்தி செல்லும். மீண்டும் அப்படியே திரும்பி வந்து விடும். ஆனால் தனது குட்டியால் தண்ணீரில் நீந்த முடியாது என்பதால் அதற்கு பாதுகாப்பாக பசு மாடு நின்றுள்ளது. இதுதானே தாய்பாசம் என்றனர்.
பசுவின் தாய் பாசம் எல்லையற்றது, அதன் கன்றின் மீது ஆழமான அன்பை வெளிப்படுத்துகிறது. தாய்ப்பசு தன் கன்றைப் பிரிக்க முயற்சிக்கும்போது, சில சந்தர்ப்பங்களில் பல கிலோமீட்டர் தூரம் ஓடுவது போன்ற நிகழ்வுகள் தாய் பாசத்தின் எல்லையற்ற தன்மையை எடுத்துக்காட்டி உள்ளன.
தாய் பசு தனது கன்றுக்குட்டியைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மிகுந்த அன்பு செலுத்தும். இது பல வீடியோக்கள் ெளியாகி உள்ளது. தாய் பசு தனது கன்றை விட்டு பிரிந்தால், நீண்ட தூரம் ஓடிச் சென்று அதை மீண்டும் தன்னுடன் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கும். இந்த செயல் தாய் பாசத்தின் ஆழமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை காட்டுகிறது. அதேபோல்தான் கன்றை ஈன்ற பசு அங்கேயே இரவு முழுவதும் இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















