தஞ்சையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கீழவாசல் பகுதியில் திடீரென்று ஒரு டீக்கடையில் இருந்த கேஸ் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



தஞ்சையில் மிகுந்த போக்குவரத்து நிறைந்த பகுதி என்றால் அது கீழவாசல்தான். காரணம் மளிகை, மீன் விற்பனை, பாத்திரங்கள், நாட்டு மருந்து கடை, காய்கறி கடைகள், டீக்கடைகள், உணவகங்கள் என்று இப்பகுதியில் ஏராளமான கடைகள் நிறைந்துள்ளது. இதனால் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். லோடு இறக்கும் வாகனங்கள், கிராமப்பகுதிகளில் இருந்து பொருட்கள் வாங்கும் மக்கள் என்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் கீழவாசலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காமராஜ் மார்க்கெட் அருகே ஒரு டீக்கடையில் கேஸ் சிலிண்டரில் இருந்து எரிபொருள் கசிந்தது. இதனால் சிலிண்டரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்துவிட்ட டீ மாஸ்டர் சட்டென்று சிலிண்டரை பயத்தில் வெளியே தூக்கி வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது.


சிலிண்டரில் பற்றி எரிந்த தீ கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பற்றியுள்ளது. இதனால் வாகனங்கள் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பீதியில் மக்கள் கத்திய அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அக்கம்பக்கத்தினர் பற்றி எரிந்த வாகனங்களின் அருகில் நின்றிருந்த மேலும் சில இரு சக்கர வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் அவசர அவசரமாக தங்களின் டூவிலர்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.


 





இந்த தீ விபத்தில் டீ மாஸ்டரின் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் அதன் அருகே இன்னொரு வாகனமும் முழுவதும் எரிந்தது. தீ விபத்து குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயும் அணைக்கப்பட்டது.


இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை காவல்துறையின் தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் கீழவாசல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேஸ் சிலிண்டரில் இருந்து எரிபொருள் கசிவை உடனே கவனித்ததால் பெரும் தீவிபத்து மற்றும் உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தீ விபத்து நேர்ந்த நேரத்தில் அதிக மக்கள் நடமாட்டம் இருந்தது. சட்டென்று கேஸ் சிலிண்டரை தூக்கி வெளியில் வைத்ததால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் எரிந்து சாம்பலாகி விட்டது. கேஸ் சிலிண்டர் உபயோகிப்பவர்கள் இதுபோன்ற நேரங்களில் தீயை அணைக்க என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண