தஞ்சாவூர்: 43 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூரில் போக்குவரத்து ஏஐடியுசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் ஓட்டுநர், நடத்துனர் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஏஐடியுசி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு போக்குவரத்து ஏஐடியுசி மத்திய சங்கத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, மின்வாரிய சங்கச் செயலாளர் ராஜகோபால், ஓய்வுபெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது 43 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 43 ஆயிரம் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து, அரசு போக்குவரத்துக் கழகங்களின் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 15-வது ஊதிய ஒப்பந்த நிலுவைத்தொகை, அகவிலைப்படி உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பெண்களுக்கு இலவசமாகவும் தாராளமாகவும் பயண அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் கூடுதல் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, காப்பீட்டுத் தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும், வாரிசு பணிக்காக பதிவு செய்துள்ளவர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப உரிய வாரிசு பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உடன் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து மத்திய சங்க நிர்வாகிகள் டி.சந்திரன், எம்.பி.இளங்கோவன், என்.ஆர்.செல்வராஜ், எம்.தமிழ்மன்னன், சி.வேம்பையன், என்.மோகன்ராஜ், ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகிகள் எம்.மனோகரன், அ.இருதயராஜ், ரெஜினோல்ட் ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சி.ராஜமன்னன் நன்றி கூறினார்.
