தஞ்சாவூர்: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலையை உயர்த்திய முதல்வருக்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


தமிழகத்தில் மக்கள் நலன் அறிந்து மக்களின் மன நிலை என்ன புரிந்து இந்தியாவில் முதன்மை வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கு பாரம்பரிய தொழிலாக மாடு வளர்த்து வருவது பழங்காலம் முதல் இருந்து வருகிறது. இன்றைய பொருளாதார மற்றும் கறவை மாடுகள் வளர்ப்பிற்கு வேண்டிய இடுபொருளின் விலைகளை கருதியும், கறவை மாடுகளின் தீவனங்கள் தவிடு, புண்ணாக்கு என கறவை பால் மாட்டிற்கு வேண்டிய உணவு பொருள்களின் விலைகள் அதிகளவு உயர்ந்துள்ளது. 


இந்த விலையேற்றத்தால் பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த கஷ்டத்தில் பால் உற்பத்தி செய்து வருகின்றனர். மாடுகள் ஆரோக்கியமாக இருக்க தீவனங்கள் முக்கியமானதாகும். ஆனால் அவற்றின் விலை உயர்வு மாடு வளர்ப்பவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பால் விலையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நெடுங்காலமாக விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் கோரிக்கைகளும் போராட்டங்களும் நடத்தி வந்தனர். 




 


பால் உற்பத்தியாளர் நிலையை கருதி ஏழை எளிய மக்கள் மற்றும் சுமார்  நான்கு லட்சம் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று  தமிழக முதல்வர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி இருப்பது தமிழகத்தில் உள்ள ஏழை எளிய நலிவடைந்த நான்கு லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த  மகிழ்ச்சி அடைத்து உள்ளார்கள். பசும் பால் விலை  ரூ.34ஆக இருந்ததை ரூ.3  கூடுதலாக உயர்த்தி ரூ.37ஆகவும், எருமை பால்  ரூ.44ஆக இருந்ததை ரூ.47 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும்,  பால் கூட்டுறவு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் தமிழக பால் உற்பத்தியாளர்களின் சார்பாகவும், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பது விவசாயிகளின் உதிரி வருவாயாக உள்ளது. ஒரு ஊரில் விவசாய பண்ணை வைத்து இருப்பவர்களைவிட பால், சாணம் போன்ற தேவைகளுக்காக சில மாடுகளை வைத்து இருப்பவர்கள்தான் அதிகம்.


நகரங்களில் கூட ஏதோ ஒரு சந்துக்குள் நுழைந்தால், கழுத்தில் எந்த கயிறும் இல்லாமல் சுவரொட்டிகளை சுவைத்தபடி செல்லும் மாடுகள், அங்கே 10 குழந்தைகளின் பால் தேவையை நிறைவேற்றும். இப்படி மாடுகள் ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவுகின்றன. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடை வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாகும். உழவுத்தொழிலும், கால்நடை வளர்ப்பும் ஒன்றை ஒன்று சார்ந்த தொழில்களாகும். கால்நடை வளர்ப்பு விவசாயக் குடும்பத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் வீட்டு வருமானத்தையும் அதிகரிக்கிறது. பண்ணை மற்றும் வீடுகளில் உள்ள கழிவுப் பொருட்களை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துவதால் பால் உற்பத்தி செலவு குறையும். கால்நடைகள், மனிதனுக்கு உணவு, எரிபொருட்கள், உரம், தோல் மற்றும் இழுவை சக்தி போன்றவற்றை வழங்குகின்றன.


தமிழகம் கால்நடை வளர்ப்பு மற்றும் உற்பத்தியில் மற்ற மாநிலங்களைவிட முன்னிலை வகிக்கிறது. இந்திய கால்நடைகளின் எண்ணிக்கையில் ஏழு சதமும், கோழிகளின் எண்ணிக்கையில் மூன்று சதமும் கொண்டுள்ள தமிழகம், பால் உற்பத்தியில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.