புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்திந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 200 நாட்களை கடந்தும் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

 

அதனை தொடர்ந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற தினமான ஆகஸ்டு 9 ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் மாசிலாமணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 

போராட்டத்தின்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

 

இதேபோல திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது குறிப்பாக நூறு ரூபாயை கடந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதேபோன்று சமையல் சிலிண்டரின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தினால் சாமானிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக மத்திய அரசு சாமானிய மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.



 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டம் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் ஆகும். இந்த சட்டத்தினால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாமல் போகக்கூடிய நிலை உருவாகும். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத் துறையில் நுழைந்து விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க ஏதுவாக இந்த சட்டம் இருக்கும், ஆகவே புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.